இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹாமாஸ் அமைப்பினர் கடந்த வாரம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் தங்கள் தரப்பு பதில் தாக்குதலை கடுமையாக நிகழ்த்தி வருகிறது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள எல்லை பகுதிகளில் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.
இந்த போர் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கும் என கூறப்படுகிறது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரு நாட்டை சேர்ந்த மக்கள் 2300 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இஸ்ரேலில் உள்ள மற்ற நாட்டு மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல தவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில், ‘ஆபரேஷன் அஜய்’ எனும் திட்டம் மூலம் மத்திய அரசு இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியர்களை மீட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்கள் 2 விமானங்கள் மூலம் 212 மற்றும் 235 பேர் என 447 பேர் வந்திருந்த நிலையில், இன்று 3வது நாளாக இரண்டு விமானங்கள் தலைநகர் டெல்லி வந்துள்ளன.
இதில் இன்று அதிகாலை 3 மணிக்கு வந்துள்ள விமானத்தில் 197 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 11 பெண்கள் உட்பட 22 தமிழர்கள் தாயகம் திரும்பி இருந்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது 4வது விமானமும் தலைநகர் டெல்லி வந்திறங்கியுள்ளது. அதில் 274 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக இஸ்ரேலில் இருந்து 918 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் படிப்பு, வேலை , ஆன்மீக யாத்திரை என சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours