தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத அடிப்படையில் வாக்கு கேட்டதாக வழக்குப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், “மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்டதற்காக தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். பெங்களூரு ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு தெற்கு தொகுதியின் சிட்டிங் எம்பியான தேஜஸ்வி சூர்யா, இம்முறை காங்கிரஸ் வேட்பாளரான சௌமியா ரெட்டியை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்நிலையில் சில தினங்கள் முன் பேட்டியளித்த தேஜஸ்வி சூர்யா, “பெங்களூரு தெற்கு தொகுதியில் 80 சதவீத பாஜகவினர், 20 சதவீத காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர். இதில் 80 சதவீதம் உள்ள பாஜகவினர் 20 சதவீதம் தான் வாக்களிக்கின்றனர். அதேநேரம், 20 சதவீதம் உள்ள காங்கிரஸ் கட்சியினர் 80 சதவீதம் வாக்களிக்கின்றனர்.
ஒவ்வொரு பாஜக வாக்காளரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் நமது வாக்கு முக்கியம். நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், காங்கிரஸின் 20 சதவீதம் பேர் வெளியே வந்து வாக்களிக்கிறார்கள். வெயில், மழை எதுவாக இருந்தாலும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உங்கள் வாக்கு. தயவுசெய்து வெளியே வந்து வாக்களியுங்கள்.” என்று கூறி மதத்தை அடிப்படையாக கொண்டு பிரச்சாரம் செய்தார் என்று புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதேபோல், பாஜக மூத்த தலைவரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி மீதும் தேர்தல் ஆணையம் வழக்கு பதிந்துள்ளது. வெறுப்பையும் பகைமையையும் ஊக்குவித்தார் என்று அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours