டெல்லி: 13 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் – 5, திரிணாமுல் காங்கிரஸ் – 4 , ஆம் ஆத்மி – 1, திமுக – 1, பாஜக – 1, ஐ.ஜ.தா – 1 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் மட்டுமன்றி, பீகார் (1), இமாச்சல் பிரதேசம் (3), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), மேற்கு வங்கம் (4) என மொத்தம் 13 தொகுதிகளுக்கு கடந்த புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்றது. அன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின் (எஸ்சி), பாக்தா (எஸ்சி), மணிக்தலா ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதேபோன்று, பீகாரில் ரூபாலி, பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு, இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர், நலகார்க், உத்தராகண்டில் பத்ரிநாத், மங்களூரு, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் எம்எல்ஏக்கள் மரணம், ராஜினாமா மற்றும் பிற கட்சிகளில் இணைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியானதாக அறிவிக்கப்பட்டு கடந்த புதன்கிழமை அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நான்கு தொகுதிகளில் 3 தொகுதிகளை கடந்த 2021 தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்தது. இதனால் இங்கு திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையேயான மோதலாக இடைத்தேர்தல் களம் உள்ளது.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மையான கங்கோடா சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை இந்த இரு கட்சிகளும் நிறுத்தியுள்ளதால் அங்கு யார் வெல்வது என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மங்களூரில், காங்கிரஸ் கட்சி காசி நிஜாமுதீனை நிறுத்தியது. அவர் மூன்று முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். உத்தராகண்ட் உருவாக்கப்பட்டதில் இருந்து மங்களூர் தொகுதியில் பாஜக இதுவரை வெற்றி பெற்றதில்லை. அக்கட்சி கர்தார் சிங் பதானாவை களமிறக்கியது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளராக மொஹிந்தர் பகத்தை அறிவித்துள்ளது. காங்கிரஸ் அந்தத் தொகுதியில் தங்கள் கட்சியின் வேட்பாளராக சுரிந்தர் கவுரை அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏ ஷீத்தல் அங்கூரல் ராஜினாமா செய்ததை அடுத்து ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதி காலியானது. அங்கூரல் மார்ச் 28 அன்று ராஜினாமா செய்தார். பின்னர் பாஜகவில் இணைந்து தற்போது அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் அங்கூரல்.
தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
13 சட்டசபை தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 13 தொகுதிகளில் வெல்லப்போவது யார் என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்: தற்போதைய சூழலில் தேர்தல் ஆணைய தகவலின்படி, பீகார் மாநிலம் ரபாலி தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் முன்னிலை வகிக்கிறது.
இமாச்சல பிரதேசத்தின் டெஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கமலேஷ் தாக்கூர் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ஹோஷ்யார் சிங் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அங்கு ஹமிர்பூர் ஹாமிர்பூரில் பாஜக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். நலகர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பவா முன்னிலை பெற்றுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் சா சுக்காராம் தாஸ் முன்னிலை வகிக்கிறார். பஞ்சாப்பின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மொகிந்தர் பகத் முன்னிலை வகிக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இந்தியா கூட்டணி முன்னிலை: உத்தரகாண்டின் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லகாபாத் சிங் பட்டோலா முன்னிலை வகிக்கிறார். மங்களூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குவாசி முகமது நிஜாமுதீன் முன்னிலை வகிக்கிறார். அதேபோல, இமாச்சல பிரதேசத்தின் ஹாமிர்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பிந்தர் வர்மா முன்னிலை வகிக்கிறார்.
மேற்கு வங்கத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 13 தொகுதி இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
பாஜக ஆளும் மாநிலங்களிலும்: குறிப்பாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours