காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூசி குர்ஷித்தை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய வெளியுறவு, சட்டத் துறை அமைச்சராக சல்மான் குர்ஷித் பதவி வகித்தார். தற்போது உத்தர பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவராக அவர் செயல்படுகிறார். சல்மான் குர்ஷித் தனது தாத்தாவும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருமான ஜாகீர் உசேன் பெயரில் அறக்கட்டளையை நிறுவிஉள்ளார். உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத்தை தலைமையிடமாக கொண்டு அறக்கட்டளை செயல்படுகிறது.
கடந்த 2009-10-ம் ஆண்டில் அறக்கட்டளையின் தலைவராக சல்மான் குர்ஷித்தின் மனைவிலூசி குர்ஷித் பதவி வகித்தார்.அப்போது உத்தர பிரதேசத்தின் 17 மாவட்டங்களில் அறக்கட்டளையின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் வழங்கப்பட்டன. இதற்காக வழங்கப்பட்ட அரசு நிதியில் ரூ.71 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த மோசடி தொடர்பாக முன்னாள் எம்எல்ஏவான லூசி குர்ஷித்மீது பரேலியில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த சூழலில் பரேலி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது லூசி குர்ஷித்தை கைது செய்ய மாஜிஸ்திரேட் சாம்பவி வாரன்ட் பிறப்பித்தார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் அசிந்தியா துவிவேதி கூறும்போது, “அரசு மானியத்தை மோசடி செய்ததாக லூசி குர்ஷித் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த மோசடியை தனியார் செய்தி சேனல் அம்பலப்படுத்தியது. இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பரேலி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்று அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours