புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடந்த போராட்டத்தின் போது பாஜக எம்பிக்களால் தான் தாக்கப்பட்டதாகவும், தனது முழங்கால்களில் இதனால் காயம் ஏற்பட்டது என்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது கடிதத்தில்,”கடந்த 17ம் தேதி மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது.
நான் இண்டியா கூட்டணி எம்பிக்களுடன் சேர்ந்து மகர் துவாரை அடைந்தபோது பாஜக எம்பிக்களால் தள்ளப்பட்டேன். இதனால் நான் என் சமநிலையை இழந்து மகர் துவாரின் முன் தரையில் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனது முழங்கால்களில் இதனால் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் எம்பிக்கள் நாற்காலியைக் கொண்டு வந்து, அதில் என்னை உட்கார வைத்தனர். மிகுந்த சிரமத்துடனும், எனது சக ஊழியர்களின் ஆதரவுடனும் காலை 11 மணிக்கு நான் சபைக்கு வந்தேன்.
இது தனிப்பட்ட முறையில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் மீதான தாக்குதலாகவே கருதுகிறேன். எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours