மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆதரவளிக்க பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முன்வைக்கும் நிபந்தனைகளால், பாஜக தலைவர்கள் தலைசுற்றிப் போயுள்ளனர்.
தனிப்பெரும்பான்மையில் ஆட்சியமைப்போம் என்று இறுமாந்திருந்த பாஜக, தேர்தல் முடிவுகள் எதிர்மாறாக அமைந்ததில் சோர்ந்து போயுள்ளது. எனவே பாஜகவின் தனியாவர்த்தன மோடி சர்க்காருக்கு பதிலாக, இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை அமைக்க உள்ளது. இதற்காக கூட்டணியின் முக்கிய அங்கத்தினர்களான பீகாரின் நிதிஷ் குமார் மற்றும் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சரிகட்டும் முயற்சியில் பாஜக தலைவர்கள் இறங்கியுள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவின் பிரத்யேக நிபந்தனைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகாத போதும், அவற்றுக்கு பாஜக தலைமை சம்மதித்து உள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரின் நிபந்தனைகளுக்கு பாஜக தலைவர்கள் சம்மதிக்க இயலாது திகைப்படைந்துள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளத்தின் கைவசமிருக்கும் 12 எம்பிக்கள் பாஜகவுக்கு அவசியம் என்பதை நன்குணர்ந்த நிதிஷ் குமார் தனது நிபந்தனைகளில் பிடிவாதமாக இருக்கிறார். அனைத்துமே பீகாரின் நலம் நாடும், அதன் எதிர்கால வளர்ச்சிக்கானவை என்பதால், தனது நிபந்தனைகளில் நிதிஷ் குமார் திடமாக இருக்கிறார்.
4 கேபினெட் அமைச்சர்கள், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, முன்கூட்டியே மாநிலத் தேர்தல், மாநிலத்தின் திட்டங்களுக்கான பல லட்சம் கோடி நிதியாதாரம் உள்ளிட்டவை நிதிஷ் குமார் நிபந்தனைகளின் பட்டியலில் இருக்கின்றன.
நிதிஷ் குமாருக்கு அவரது பழைய நண்பர்களான ’இந்தியா கூட்டணி’யின் தலைவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதும் பாஜகவை கிலியூட்டி வருகிறது. எனவே தனது அரசியல் பேரத்தில் நிதிஷ் குமார் மேலும் உறுதியாக இருக்கிறார். தான் கோரும் கேபினெட் அமைச்சர்களுக்கு ரயில்வே, ஜல்சக்தி, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பீகாருக்கு அத்தியாவசியமான துறைகளை நிதிஷ் கோரியுள்ளார்.
இவற்றைப் பெறுவதன் மூலமாக, பீகாரின் வளர்ச்சிக்கு அடித்தளம் இடமுடியும் என்பதோடு, மக்களின் ஆதரவால் மீண்டும் ஒருமுறை அவரால் அங்கே முதல்வராக முடியும். அதுவும், பாஜக, ஆர்ஜேடி என கூட்டணிகளின் ஆதரவுக்கு அவசியமின்றி, தனிப்பெரும்பான்மையுடனும் நிதிஷ் குமாரால் ஆட்சியமைப்பதும் சாத்தியமாகும். ஆனால் அதே தனிப்பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ் குமாரிடம் சிக்கிக்கொண்டு விழிபிதுங்கும் பாஜக அவற்றுக்கு இணங்குமா என்பது சந்தேகமே.
+ There are no comments
Add yours