இந்த வாரம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டல் தொடர் நடந்து கொண்டிருந்த போது சந்திராயன் 3 வெற்றி குறித்து விவாதம் மக்களவை நடைபெற்று வந்தது. அப்போது பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் எம்பி டேனிஷ் அலியை பார்த்து பாஜக எம்பி ரமேஷ் பிதுரி ‘தீவிரவாதி’ என கடும் சொற்களால் விமர்சித்து பேசியுள்ளார்.
மக்களவை உறுப்பினரை பார்த்து இன்னொரு உறுப்பினர் தீவிரவாதி போன்ற சர்ச்சை மிகுந்த வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் கண்டனங்கள் பதியப்பட்டு வருகின்றன. பலரும் இது குறித்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், நாடாளுமன்றத்தில் இது மாதிரி மீண்டும் தொடர்ந்தால் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இது தொடர்பாக பேசிய டேனிஷ் அலி, ரமேஷ் பிதுரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி விடுவேன் எனவும், நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி ஆக இருக்கும் எனக்கே இவ்வாறு நடந்தால் சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும். என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களை அவர்களின் சமூகத்துடன் இணைத்து தாக்குவதற்காகவா இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது.?
பாஜக எம்பியின் செயல் ஒட்டுமொத்த நாட்டையும் அவமானப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். இதற்கு பாஜக கட்சி நடவடிக்கை எடுக்குமா.? அல்லது அவருக்கு பதவி உயர்வு அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என டேனிஷ் அலி பேசினார்.
பகுஜன் சமாஜ்வாடி எம்பி டேனிஷ் அலியை பாஜக எம்பி ரமேஷ் பிதுரி கடுமையாக விமரசித்த விவகாரம் குறித்து இந்தியா கூட்டணி கட்சி சார்பில் மக்களவை சபாநாயகருக்கு கண்டன கடிதம் அனுப்பப்பட்டது. அதில், காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்தியா கூட்டணி சார்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடித்தில், மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால் உங்கள் மனதில் நாடாளுமன்றத்தில் நடந்தவற்றை பதிய வைப்பது எனது கடமையாக இருக்கிறது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு முன்னணி அரசியல் கட்சியின் உறுப்பினரான டேனிஷ் அலிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது நாடாளுமன்ற விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், 75 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூரும் வகையில் கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வின் போது, அதுவும் ‘மிஷன் சந்திரயான் III’ வெற்றியைக் குறித்த விவாதத்தின் போது, இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தது.
நாடாளுமன்ற வரலாற்றில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக, அதுவும் சபாநாயகர் முன்னிலையில் இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதில்லை. நீங்கள் உறுப்பினர் ரமேஷ் பிதுரியை எச்சரித்திருந்தாலும், நீங்கள் சில அநாகரீகமான வார்த்தைகளை நீக்கிவிட்டீர்கள்.
டேனிஷ் ஆல் மீது அவர் பயன்படுத்திய முல்லா அடன்க்வாடி (பயங்கரவாதி) என்ற பேச்சுகள் ஊடகங்களில் பரவி வருகின்றன. இது, நாடாளுமன்றம் மற்றும் அதன் புனிதத்தன்மையை வேறுவிதமாக பிரதிபலிக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சி மற்றும் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான மனநிலையையும் இந்த சம்பவம் பிரதிபலிக்கிறது.
அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட இந்தச் சம்பவத்தில் நாம் அனைவரும் சாட்சியாக இருப்பதால், சபையின் பதிவுகளில் இருந்து கருத்துக்களை நீக்குவது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சூழ்நிலைகள், நாடாளுமன்ற விதிமுறைகள் மற்றும் விதிமீறல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை சிறப்புரிமைக் குழு விரிவாக ஆராய்ந்து, தவறு செய்த உறுப்பினர் ரமேஷ் பிதுரி மீது தண்டனை நடவடிக்கை எடுப்பது மட்டுமே பொருத்தமானதாக இருக்கும்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவு உங்களிடமே உள்ளது என்றாலும், மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் பிரதிநிதி என்ற முறையில், இந்த துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து மீண்டும் ஒருமுறை எனது வேதனையைத் தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். பாராளுமன்றத்தின் புனிதம் பாதுகாக்கப்படுவதற்கான உங்கள் நடவடிக்கையை எதிர்நோக்குகிறோம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்தியா கூட்டணி சார்பாக தெரிவித்து இருந்தார்.
+ There are no comments
Add yours