ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவைகளை பாஜக கைப்பற்றும்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் !

Spread the love

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாயுதிகூட்டணியில் தேர்தலை சந்திக்கின்றன.

அதேபோன்று எதிர் தரப்பில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியில் களம் காண்கின்றன. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து மேட்ரைஸ் நிறுவனம் அக். 10 மற்றும் நவ. 9-க்கு இடையில் 1,09,000 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் அடிப்படையில் முடிவுகளை அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கு 145 முதல் 165 இடங்கள் வரை கிடைக்கும் என்பது கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. அதேநேரம், மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு 106 முதல் 126 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும்.

மகாயுதி கூட்டணியில் அங்கம்வகிக்கும் பாஜகவுக்கு, மேற்கு மகாராஷ்டிரா, விதர்பா, தானே-கொங்கன் பகுதிகளில் அதிக செல்வாக்கு உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு வடக்கு மகாராஷ்டிரா, மரத்வாடா பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைக்கும். இவ்வாறு கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் அங்கு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 81இடங்களில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 45-50இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. அதேநேரம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி 18-25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 68 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 2 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours