டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியை வழங்க ஆம் ஆத்மி கட்சி முன்வந்துள்ளது. இது, இரு கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மிகவும் முக்கியமான மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், டெல்லியில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சந்தீப் பதாக், “தகுதியின் அடிப்படையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம் கூட தர முடியாது என்றாலும், கூட்டணி தர்மத்தை மனதில் கொண்டு காங்கிரஸுக்கு டெல்லியில் ஓர் இடம் வழங்குகிறோம்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 6 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும் போட்டியிடும் என்று முன்மொழிகிறோம். டெல்லியைப் பொறுத்தவரை மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஓர் இடம் கூட பிடிக்கவில்லை. டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் 250 இடங்களில் 9 இடங்களை மட்டுமே அக்கட்சி பிடித்தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த முந்தைய தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி அடைந்திருக்கும் வலுவான நிலை, சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றிருக்கும் பெரும்பான்மை ஆகியவை தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. மறுபுறம் தொடர் தேர்தல் தோல்விகளைச் சந்தித்த போதிலும் காங்கிரஸ் கட்சி தேசிய தலைநகரில் மீண்டும் காலூன்ற முயற்சி மேற்கொள்கிறது.
முந்தைய பேச்சுவார்த்தையின்போது டெல்லியில் 4:3 என்ற தொகுதிப் பங்கீடு முன்மொழியப்பட்டது. அதாவது, காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும் போட்டியிடும் எனப் பேசப்பட்டதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்திருந்தனர். என்றாலும் எம்.பி.பதாக்கின் அறிக்கை, இரு தரப்புக்கும் திருப்தி அளிக்கும் ஒரு முடிவு எட்டப்படவில்லை என்பதை காட்டுகின்றது.
இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஏற்கெனவே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பஞ்சாப்பில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மியே போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்துள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸுக்கு டெல்லியில் 1 தொகுதி வழங்க முன்வந்துள்ளது.
முன்னதாக, பஞ்சாப்பில் சனிக்கிழமை நடந்த பேரணி கூட்டம் ஒன்றில் பேசிய டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், “இன்று மீண்டும் உங்கள் ஆசிர்வாதத்தை நாடி வந்திருக்கிறேன். பஞ்சாபில் 13 இடங்களும், சண்டீகரில் ஒரு இடமும் என மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆம் ஆத்மி வரும் 10-15 நாள்களுக்குள் 14 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவிக்கும். இந்த 14 தொகுதிகளிலும் எங்களது கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இவை தவிர கோவா, ஹரியாணா போன்ற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி தங்களுக்கு இடம் கேட்பது இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. இவை அதன் சொந்த தேர்தல் வாய்ப்புகளை நீர்த்துப் போக செய்துவிடும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
கடந்த 2019 ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours