புதுடெல்லி: வரும் 2025-ம் ஆண்டின் பிற்பாதியில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகே 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள நான்கு டெலிகாம் நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 4ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கியது. இருப்பினும் நிறுவப்பட்ட 4ஜி செல்போன் டவர்கள் எண்ணிக்கை குறைவு என பிஎஸ்என்எல் வட்டாரத்தில் இருந்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது. உதாரணமாக புதுச்சேரி நகரில் மொத்தமாக நாற்பது 4ஜி டவர்கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு 4ஜி சேவையை நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகு, 5ஜி நெட்வொர்க் சார்ந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொண்ட பிறகே 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
2025-ம் ஆண்டின் முதல் பாதிக்குள் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் 4ஜி டவர்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இதனை அண்மையில் நடைபெற்ற பிஎஸ்என்எல் புதிய லோகோ அறிமுக நிகழ்வில் அவர் பகிர்ந்திருந்தார். இந்த நிகழ்வில் 7 புதிய சேவைகளை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்திருந்தது.
+ There are no comments
Add yours