புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு உயர் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி அழைத்து கடும் கண்டனத்தைத் தெரிவித்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “நேற்று நாங்கள் கனடாவின் உயர் தூரதரக அதிகாரியை அழைத்து, அக்.29-ம் தேதி அன்று கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைக்குழுவில் நடந்த விஷயங்கள் குறித்து தூதரக ரீதியில் ஒரு குறிப்பைக் கொடுத்தோம். அந்தக் குறிப்பில், கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் நிலைக்குழுவின் முன்பு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக தெரிவித்த அபத்தமானதும், ஆதாரமற்றதுமான குற்றச்சாட்டுகளுக்கு இந்திய கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் இருதரப்பு உறவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் குறிவைக்கப்பட்டதற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவே காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு தான்தான் கூறியதாக கனடா துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்களுக்கு ‘இந்தியாவில் உள்ள மூத்த அதிகாரி’ ஒருவர் அங்கீகாரம் அளித்ததாகவும், அது குறித்த ஆதாரங்களை கனடா பாதுகாப்பு முகமைகள் சேகரித்ததாகவும் கூறியிருந்தது. அந்த மூத்த அதிகாரி யார் என்ற கேள்விக்கு பின்னர் அமித் ஷா என அந்தப் பத்திரிகை தெரிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு அங்கீகாரம் அளித்தது அமித் ஷாதான் என்ற தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்தது தான்தான் என கனடாவின் வெளியுறவுத்துணை அமைச்சர் டேவிட் மோரசின் தெரிவித்திருந்தார்.
இந்தியா – கனடா உறவில் விரிசல்: முன்னதாக, காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டதற்கு நரேந்திர மோடி அரசு உதவியதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி இருந்தார். இந்த விவகாரம் இரு தரப்பு உறவில் பெரும் விரிசல் ஏற்பட காரணமாக இருந்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை அடுத்து கனடாவில் உள்ள 41 தூதரக அதிகாரிகளை இந்திய திரும்ப அழைத்துக்கொண்டது. இந்தியாவில் இருந்தும் கனடா நாட்டு தூதர்களை வெளியேற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours