ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் போட்டியிடுபவர்கள் சுயேச்சைகள். இவர்கள் தேர்தலில் வெல்ல முடியாவிட்டாலும் பொதுமக்களின் கவனத்தை கவர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில், அர்த்தி பாபா (பாடை பாபா) என்றழைக்கப்படும் ராஜன் யாதவ் உ.பி.யின் கோரக்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
புத்த துறவியான இவர் கோரக்பூரின் தனியார் கல்லூரியில் கிடைத்த வேலையை வேண்டாம் என மறுத்து விட்ட பாபா. அதற்கு தாம் கோரக்பூரில் மேற்கொண்டு வரும் பொதுச் சேவையை காரணம் காட்டுகிறார். கோரக்பூரில் மக்களவை தேர்தல் ஜுன் 1-ல் கடைசி கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கலுக்கும், பிரச்சாரங்களுக்கும் இறந்த உடலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும் பாடையை அவர் பயன்படுத்துகிறார்.
அதைவிட விநோதமான செயலாக தனது தேர்தல் அலுவலகத்தை ராப்தி நதிக்கரையில் உள்ள சுடுகாட்டில் அமைத்துள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் அர்த்தி பாபா கூறும்போது, ‘நாடு முழுவதிலும் ஊழல் பெருகி விட்டது.
பொதுமக்களின் பெரும்பாலான வேலைகள் முடிவதில்லை. வேலைவாய்ப்பு, வளர்ச்சி போன்றவை நாட்டில் இறப்பு நிலையை அடைந்து விட்டது. இதை குறிப்பிடும் வகையில் நான் பாடையில் ஊர்வலமாக சென்று சுடுகாட்டில் எனது தேர்தல் அலுவலகத்தை அமைத்துள்ளேன்’ என்றார்.
+ There are no comments
Add yours