விஜயவாடா: “தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன். இன்று நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன்.” என்று கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு. இதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
வெற்றியை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கினார். அதில், “எனக்கும் அனுபவங்கள் உள்ளன. நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களை கண்டுள்ளேன். இது மாதிரியான சிறப்பு தேர்தலை பார்த்தது இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன். இன்று நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா இணைந்து பணியாற்றியதால் தான் இந்த வெற்றி கிடைத்தது. ஜனசேனா தலைவர் பவன் கல்யாணுக்கும், பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எனது நன்றிகள்.
தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கும் எனது நன்றி. என் வாழ்நாளில் இதுபோன்று சிறப்புமிக்க தேர்தலை கண்டதில்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்துக்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனித்து தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனை தொடர்ந்தே இவர்களின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.
அதேநேரம், இண்டியா கூட்டணி சார்பில் சந்திரபாபு நாயுடுவை இழுக்க முயற்சி நடந்துவருவதாக பேச்சுக்கள் வெளியானது. இந்தநிலையில், தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிப்பதாக கூறி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
+ There are no comments
Add yours