அமராவதி: டெல்லி சென்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது ஆந்திர மாநிலத்தின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலையை விவரித்தார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது டெல்லி சென்றுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார். அப்போது, ஆந்திர மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு பேசியதாக கூறப்படுகிறது. போலவரம் அணைக்கட்டு பணியின் மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்பதாக கூறியதை தொடர்ந்து, அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, தலைநகர் அமராவதி வளர்ச்சி நிதியான ரூ.15 ஆயிரம் கோடி குறித்தும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பின்தங்கிய மாவட்டங்கள்: இது மட்டுமின்றி ஆந்திராவில் பின்தங்கிய 8 மாவட்டங்களுக்கு வளர்ச்சி நிதி வழங்குவதாக அறிவித்தது குறித்தும் பிரதமரிடம் ஆலோசித்துள்ளார். மேலும், ஆந்திர அரசியல் நிலைமை குறித்தும், ஜெகன் மோகன் ரெட்டியின் மோசமான ஆட்சி குறித்தும் பிரதமரிடம் விவரித்ததாக கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு தனதுடெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று அமராவதி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours