பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை போலீஸார் மத்திய பிரதேசத்துக்கு விரைந்துள்ளனர்
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 6, 7-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின்போது அவர் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையையும் ஏற்படுத்தின.
இந்த நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலக தொலைபேசி எண்ணுக்கு நேற்று முன்தினம் மதியம் 12.50 மணி அளவில் ஓர் அழைப்பு வந்தது. என்ஐஏ அலுவலக தலைமைக் காவலர் ஸ்ரீநாத் எடுத்து பேசினார். அதில் பேசிய மர்ம நபர், ‘‘24 மணி நேரத்துக்குள் பிரதமர் மோடியை கொலை செய்து விடுவேன்’’ என்று இந்தியில் மிரட்டிவிட்டு, இணைப்பை துண்டித்தார்.
வட மாநிலங்களில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போனில் மிரட்டல் அழைப்பு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ச்சி அடைந்த தலைமைக் காவலர் ஸ்ரீநாத், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. உடனடி விசாரணைக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, கீழ்ப்பாக்கம் சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் எண்ணை சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்ததில், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மிரட்டல் அழைப்பு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மத்திய பிரதேச போலீஸாருக்கு சென்னை சைபர் கிரைம் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் மத்திய பிரதேசத்துக்கு விரைந்துள்ளனர்.
மிரட்டலுக்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பிரதமருக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளதால் என்ஐஏ அதிகாரிகளும் இதில் சிறப்பு கவனம் செலுத்தி விசாரித்து வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் முயற்சியில் என்ஐஏ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours