பிரதமர் மோடி அதிமுகவை விமர்சிக்காமல் இருப்பதற்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை புகழ்வதற்கும் என்ன காரணம் என்று விசாரித்தால் அதற்கு கிடைக்கும் பதில் சுவாரஸ்யமானதாக உள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். பாஜகவின் பொதுக்கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகள் என அனைத்து மேடைகளிலும் தேர்தலை மனதில் வைத்து அரசியல் பேச்சுக்களே தூக்கலாக உள்ளன.
தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் பிரதமர் மோடி திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். வாரிசு அரசியலில் ஈடுபடுவதாகவும், ஊழலில் திளைப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்த இடத்தில் இங்குள்ள ஆளுங்கட்சியை விமர்சிக்கிறார் என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. வட மாநிலங்களுக்குச் சென்றாலும் திமுகவை விமர்சிப்பதை மோடி வாடிக்கையாக வைத்துள்ளார்.
காங்கிரஸையும் அதன் மறைந்த தலைவர்களையும் விமர்சித்து வந்த மோடி தற்போது திமுக போன்ற பிராந்திய கட்சிகளை விமர்சிப்பதன் மூலம் அக்கட்சிகள் தான் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றன என்பது தெளிவாகிறது. காங்கிரஸை அடித்து பாஜகவே ஓய்ந்து விட்டது என்றும் கொள்ளலாம்.
திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு பாஜக, எதிர் அணியில் இருக்கும் அதிமுகவை விமர்சிப்பதில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் போதுகூட அதிமுகவை நோக்கி மோடியின் சுட்டு விரல் நீள்வதில்லை. மாறாக ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற அதிமுகவின் மறைந்த தலைவர்களை புகழும் வேலையையும் மோடி செய்து வருகிறார்.
இதன் மூலம் தனது கொள்கை எதிரியாக திமுகவை கருதும் பாஜக, அதிமுகவுக்கு அந்த இடத்தை தரவில்லை. திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று பாஜக கூறிக்கொண்டாலும் அது திமுகவை மட்டுமே குறிப்பதாகவே அதன் செயல்கள் உள்ளன.
ஜெயலலிதா, எம்ஜிஆரை மோடி புகழ்வதற்கு முக்கிய காரணமாக அரசியல் விமர்சகர்கள் கூறுவது அதிமுக உடனான கூட்டணி வாய்ப்பை கடைசி நேரம் வரை எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதைத் தான். ஆனால் அதிமுகவோ பாஜக உடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்பதில் மீண்டும் மீண்டும் உறுதியாக கூறிவருகிறது.
பாஜகவின் விருப்பம் அதிமுக உடன் கூட்டணி வைப்பது என்பது போலவும், எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதிக்காததால் இது சாத்தியமாகவில்லை என்பது போலவும் கூறப்படுகிறது. ஒருவேளை பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அதை எப்படியாவது செயல்படுத்தியிருக்கும். அதற்கான அத்தனை ‘வல்லமை’யும் பாஜகவுக்கு இருக்கிறது.
பாஜக இறுக்கி பிடித்தால் எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லாமல் கூட்டணியை தொடர்ந்திருப்பார். அதிமுக கூட்டணி வேண்டும் என்றால் அண்ணாமலையை அப்போதே அதிமுகவை கொஞ்சம் அணுசரித்து போகச் சொல்லி உத்தரவு வந்திருக்கும். டெல்லி தலைமையின் உத்தரவை மீறி அதிமுக உடனான கூட்டணியை உடைக்கும் அளவுக்கு அண்ணாமலை சென்றிருக்கவும் மாட்டார்.
அப்படியானால் அதிமுக உடன் கூட்டணியை முறித்து பாஜக தலைமையில் ஒரு அணி அமைப்பது டெல்லியின் முடிவாகத் தான் நூறு சதவீதம் இருக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் இப்போது ஏன் அதிமுகவை பாஜக விமர்சிக்க மறுக்கிறது, ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற தலைவர்களை ஏன் வீணாக புகழ்ந்து தள்ளுகிறது என்பதை யோசிக்க வேண்டும்.
சமீபத்தில் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியே ஆதிக்கம் செலுத்தும், அதே சமயம் பாஜக தனது வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 3 சதவீதத்திலிருந்த பாஜக 12 சதவீதம் பெறும் என தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதே சமயம் அதிமுக தனது வாக்கு வங்கியை கணிசமாக இழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தனது வாக்கு வங்கியை இழப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்து நிற்கின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்தாலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஆளுக்கொரு திசையில் நிற்பதால் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கி அடி வாங்கியுள்ளது.
அதிமுக வாக்கு வங்கியில் கணிசமானது திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் அணி திரண்டது தான். இது எம்ஜிஆர் காலத்தில் இருந்து தொடர்வது. அதே தான் ஜெயலலிதா காலத்திலும் இருந்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக ஆளும் திமுக அரசுக்கு எதிராக செயலாற்றவில்லை என்பது பரவலாக உள்ள குற்றச்சாட்டு. அது உண்மையும் கூட. உட்கட்சிப் பிரச்சினையை சமாளிப்பது நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் தனது தரப்பை நிறுவி அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக வருவதற்கே அவருக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன.
இந்த இடைவெளியில் தமிழகத்தில் அண்ணாமலை திமுகவை எதிர்ப்பதில் முன்வரிசைக்கு வந்துவிட்டார். இப்போது வரை எடப்பாடி பழனிசாமி திமுகவை காத்திரமாக எதிர்த்துவிடவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின்னர் இதற்கு முன் இல்லாத அளவு ஒரு கவனம் அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. கிராமங்கள் வரை பாஜக சிறிதளவேனும் பேசுபொருளாகியுள்ளது. பாஜக தனது சக்தியை அதிகரித்துள்ளது என்பதை உணர்ந்துள்ளது. அது எவ்வளவு என்பதை பார்க்கவும் அடுத்தடுத்து அதை உயர்த்தவும் பாஜக தயாராகி வருகிறது.
அதனாலே அதிமுகவை ஓரங்கட்டி தனிப் பாதை அமைத்து பயணம் செய்கிறது பாஜக. ஆனாலும் அதிமுகவை கடுமையாக விமர்சிப்பதற்கும், ஜெயலலிதா, எம்ஜிஆரை புகழ்வதற்கும் காரணம் இருக்கிறது. பாஜகவை நோக்கி வரும் வாக்கு வங்கி என்பது இதற்கு முன்னர் அதிமுகவிடம் இருந்த திமுக எதிர்ப்பு வாக்கு வங்கி. அதை கைப்பற்றுவதே பாஜகவின் முதல் திட்டம் எனும் போது ஜெயலலிதா, எம்ஜிஆரை விமர்சிப்பது அந்த வாக்குகள் தங்களை நோக்கி வருவதை தடுத்துவிடும் என்று கருதுகிறார்கள்.
உயிரோடிருக்கும் போது ஜெயலலிதாவை விமர்சித்தால் அது வீரமாக பார்க்கப்பட்டிருக்கும், ஆனால் இறந்த தலைவர் ஒருவரை விமர்சிப்பதை தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உயிரோடிருக்கும் வரை வாக்குகள் அவருக்கு செலுத்தாமல் கூட இருந்திருக்கலாம் மக்களும் விமர்சித்திருக்கலாம். ஆனால் இறந்த பின்பு அவர் மீதான விமர்சனங்கள் எல்லாம் காணாமல் போய் ஒரு வித புனித தன்மை கிடைத்துவிடுகிறது. இதற்கு தமிழக அரசியலில் பல உதாரணங்கள் உள்ளன.
அண்ணா, பெரியார் ஆகியோரை இதற்கு முன்னால் இங்கு விமர்சித்து பாஜக வாங்கி கட்டிக்கொண்டதெல்லாம் வரலாறு. அந்த தவறை எம்ஜிஆர், ஜெயலலிதா விஷயத்தில் செய்ய பாஜக தலைமை தயாராக இல்லை. அதனாலே மோடி அதிமுகவை அட்டாக் செய்யாமல் தனது முழு பார்வையையும் திமுகவை நோக்கி திருப்புகிறார்.
மற்றபடி எடப்பாடி பழனிசாமியை ஈர்ப்பதற்காக இப்படி பேசுகிறார், டிடிவி தினகரன் -ஓபிஎஸ்ஸை தக்க வைப்பதற்காக இப்படி பேசுகிறார் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்கள். இவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவத்தை பாஜக இதற்கு முன் எப்போதும் வழங்கியதில்லை.
+ There are no comments
Add yours