மும்பை: இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என அந்நாட்டு தூதர் காங் ஜியான்ஹுவா தெரிவித்துள்ளார்.
ஜூலை 24 அன்று பலத்த காயம் அடைந்து அதிக ரத்த இழப்பால் பாதிக்கப்பட்ட சீன கடற்படை வீரரை, இந்திய கடலோர காவல்படையும் இந்திய கடற்படையும் இணைந்து வெற்றிகரமாக மீட்டு அவருக்கு சிகிச்சை அளித்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள சீன துணை தூதரகத்தின் தூதர் காங் ஜியான்ஹுவா, இந்திய கடலோர காவல்படையின் (மேற்கு) கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பீஷம் சர்மாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “பலத்த காற்று மற்றும் அலைகளுக்கு மத்தியில் இந்திய கடலோர காவல்படையின் மீட்புக் குழுவினர், சீன கடற்படை வீரரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்திய கடலோர காவல்படையின் உடனடி மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை காரணமாக தற்போது அவர் நன்கு குணமடைந்து சீனாவுக்கு திரும்பிவிட்டார்.
உங்களுக்கும், அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதற்காகவும், இந்திய கடலோர காவல்படைக்கு எனது மிக உயர்ந்த மரியாதையை செலுத்துவதற்காகவும் மும்பையில் உள்ள சீன தூதரகத்தின் சார்பாக இங்கு வந்துள்ளேன்.
இந்த மீட்புப் பணிகள் கடலோரக் காவல்படையின் ‘வயம் ரக்ஷமா’ (நாங்கள் பாதுகாக்கிறோம்) என்ற பொன்மொழியை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் பொதுவான தத்துவமான, ‘மக்கள் முதலில், வாழ்க்கை முதலில்’ என்பதை நிரூபிக்கிறது.
1938 ஆம் ஆண்டில், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடும் சீன மக்களுக்கு உதவ இந்திய மருத்துவக் குழு சீனாவுக்குச் சென்றதை நினைவு கூற விரும்புகிறேன். மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூரைச் சேர்ந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கோட்னிஸ், சீன மக்களின் விடுதலைக்கான மகத்தான நோக்கத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்தார். பல சீன மக்களும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு தங்கள் உறுதியான ஆதரவை வழங்கினர்.
தற்போதைய சூழலில், இந்திய கடலோர காவல்படையின் இந்த மீட்பு பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான நட்பை வலுப்படுத்தும். “இரக்கத்திற்கு எல்லைகள் தெரியாது” என்று ஒரு சீன பழமொழி கூறுகிறது.
இரு அண்டை நாடுகளின் மக்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. சீனர்களும் இந்தியர்களும் சகோதர சகோதரிகளைப் போல ஒன்றாக நடப்பார்கள்” என்று தெரிவித்தார்.
இந்திய கடலோ காவல்படை கடந்த 10 ஆண்டுகளில் 27 சீனர்களைக் காப்பாற்றி இருப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் பீஷம் சர்மா குறிப்பிட்டார்.
+ There are no comments
Add yours