இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக ’350’- க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளன.
காங்கிரஸின் ரியாக்ஷன் என்ன? – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ இந்தத் தேர்தல் கணிப்புகள் தேர்தலுக்குப் பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு கிடையாது. பிரதமர் மோடியின் ஏஜென்சிகள் எடுத்த கற்பனை கருத்துக் கணிப்பு” என விமர்சித்துள்ளார். இதற்கு முன்னதாக, இண்டியா கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, “295 இடங்களில் வெற்றி பெற்று இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்” எனப் பேசினார்.
ஒவ்வொருமுறை தேர்தலுக்குப் பிந்தைய ’Exit Poll’ கருத்துக் கணிப்புகள் கவனம் பெறுகின்றன. ஆனால், அதன் துல்லியம் குறித்து கேள்விகளும் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படுகின்றன.
தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பு என்றால் என்ன? – வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை `Exit poll’ என சொல்கிறோம். தேர்தலில் வாக்களித்துவிட்டு மையத்திலிருந்து வெளிவரும் வாக்காளரிடம் அவர்கள் எந்தக் கட்சி அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார் என்பது கேட்கப்படும். அவர்கள் சொல்லும் பதில் பதிவு செய்யப்படும். பெரும்பாலும், நேரடியான கேள்விகளாக அல்லாமல் அவர்களுக்குப் பிடித்த கட்சி எது? பிடித்த தலைவர் யார்? எனக் கேட்கப்பட்டு இந்தக் கட்சிக்குத் தான் வாக்களித்திருப்பார்கள் என்னும் முடிவுக்கும் வரக்கூடும்.
கருத்துக் கணிப்பு நடத்தும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வாக்குச் சாவடிக்கு வெளியே நிற்க வைக்கின்றன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10 வாக்காளருக்கு ’ஒருவர்’ என்னும் முறையிலும் அதுவே பெரிய தொகுதியாக இருந்தால் 20 வாக்காளருக்கு ஒருவர் என்னும் அடிப்படையில் கருத்துக் கணிப்பு நடத்தப்படும். இதன் முடிவுகளைத் தான் ’Exit poll’ கருத்துக்கணிப்பு என்கிறோம்.
வைக்கோல் கருத்துக் கணிப்பு! : 1937-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் முதன்முதலாக நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்கும் மக்கள் வாக்குச்சாவடிக்கு வெளியில் வைக்கோல் குச்சியைப் போடுமாறு அக்கட்சி கேட்டுக்கொண்டது. அதனை எண்ணி எத்தனை பேர் காங்கிரஸுக்கு வாக்களித்தார்கள் எனக் கண்டறியப்பட்டது தான் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ’எக்சிட் போல் சர்வே’. என்கிறார்கள்.
அதன்பின்னர், டிவி மற்றும் சமூக வலைதளங்கள் வருகைக்குப் பின்னர் தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பு பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கருத்துக் கணிப்பு வரலாறு : இந்தியாவில் 1996-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என ’எக்ஸிட் போல்’ கருத்துக் கணிப்பு சொல்லியது. அது அப்படியே நடந்தது. அதன்பின், மக்கள் கருத்துக் கணிப்பை நம்பத் தொடங்கினர். ஆனால், 1997-ம் ஆண்டு பல அரசியல் கட்சிகள் கருத்துக் கணிப்பு ஒருதலைபட்சமாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. அதனால், கருத்துக் கணிப்புகள் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது. அதன்பின், செய்தி நிறுவனங்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு மீண்டும் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டதன் விளைவாக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வாக்குப்பதிவு முடிந்தபிறகு மட்டுமே கருத்துக் கணிப்பு வெளியிட வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அதன்படி பல செய்தி நிறுவனங்களும் அமைப்புகளும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகிறது.
கருத்துக் கணிப்புகள் தோற்றதில்லையா? – 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வெற்றியடைந்து ஆட்சியை அமைத்தது. அதன்பின் தொடர்ந்து காங்கிரஸ் 10 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ’240-280’ இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கணிக்கப்பட்டது. அதேபோல், ’282’ இடங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ’306’ இடங்களிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 120 இடங்களிலும் வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ’352’ இடங்களில் வென்றது. அவற்றில் ’303’ இடங்களைப் பாஜக மட்டுமே கைப்பற்றியது. மறுபுறம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 93 இடங்களிலும் காங்கிரஸ் 52 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இப்படியாக, இந்திய தேர்தல் வரலாற்றில் பலமுறை கருத்துக் கணிப்புகள் துல்லியமாகவும், சிலமுறை மாறியும் இருந்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் கருத்துக் கணிப்பு ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக வந்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பை விமர்சிக்கும் காங்கிரஸ் மக்கள் கணிப்புக்கு மதிப்பளிக்கிறோம். ஜூன் 4-ம் தேதி உண்மையான கணிப்பு தெரியும் எனக் கூறி வருகிறது.
கணிப்புகளை எதிர்க்கட்சி ஏற்காதது ஏன்? – 1. வாக்களித்துவிட்டு வெளிவரும் மக்களிடன் நிறுவனம் நடத்தக் கூடிய கருத்துக் கணிப்பு இது. இதில் பலர் வாக்களித்த கட்சியைப் பற்றி சொன்னால் பிரச்சினையாகும் என அஞ்சி மாற்றி சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
- மேலும், பல அமைப்புகளும் தாங்கள் எத்தனை மக்களிடம் கருத்துக் கணிப்பை எடுத்தோம், அதன் ஆய்வுமுறை (methodology) என்ன என்பதை வெளிப்படையாக சொல்வதில்லை.
- இந்தக் கருத்துக் கணிப்புகளைப் பெரும்பாலும் தனியார் அமைப்புகள்தான் நடத்துகின்றனர். எனவே, கட்சி சார்பாகக் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட வாய்ப்பும் இருக்கிறது. இதனால், அது ஒருதலைபட்சமான கணிப்பாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஆகவே, இதில் இப்படியான கேள்விகள் எழுவதால் கணிப்புகள் துல்லியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிவது கடினம்தான். அதனால், வெற்றி வாய்ப்பு குறைவு எனக் கணிக்கப்படும் கட்சிகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கின்றன. ஆனால், உறுதியான முடிவு வாக்கு எண்ணிக்கையின்போது தான் தெரியவரும்.
+ There are no comments
Add yours