6 வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் !

Spread the love

குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி உள்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டம் 6 வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

டெல்லியில் கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். மத்திய அரசு அப்போது கொண்டு வந்த புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றது.

இந்த நிலையில், வேளாண் விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி என்ற பெயரில கடந்த 13 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர். பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப் – ஹரியானா இடையிலான ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

விவசாயிகளை வர விடாமல் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ளனர். அப்பகுதிகளில் இணைய சேவையை மத்திய அரசு முடக்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறு இன்று 6வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 3 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இன்று 4 வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்தது. விவசாயிகளின் 10 கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி) அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours