கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணாவைத் தொடர்ந்து அவரது சகோதரர் சூரத் ரேவண்ணாவும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பி-யாக பதவி வகித்து வந்த பிரஜ்வல் ரேவண்ணா, ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக மக்களவைத் தேர்தலின் போது வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற பிரஜ்வல், மீண்டும் இந்தியா திரும்பிய போது சிறப்பு தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர். இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் தெரிவித்த பெண்ணை கடத்திச் சென்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
தற்போது ரேவண்ணா ஜாமீனில் விடுதலை ஆகியுள்ள நிலையில் அவரது இரண்டாவது மகனான சூரஜ் ரேவண்ணா மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டிருந்தது. வேலை கேட்டு வந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தொண்டர் ஒருவரை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹாசன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூன் 16ம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு ஹாசன் போலீஸார் சூரஜ் ரேவண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பிறகு சூரஜ் ரேவண்ணாவை போலீஸார் கைது செய்துள்ளனர். சூரஜ் ரேவண்ணா தற்போது அம்மாநில சட்டமேலவை உறுப்பினராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. தந்தை மற்றும் மகன்கள் என அடுத்தடுத்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முக்கிய தலைவர்கள், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு வருவது கர்நாடக அரசியலில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours