சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடும் போட்டி: வாக்கு எண்ணிக்கை ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. வெற்றிக்கு 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில் காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் 43 தொகுதிகளிலும், பாஜக 43 தொகுதிகளிலும், 4 இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது. இதனால் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 46-ஐ கடந்து முன்னிலை பெறும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும்.
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் ஆரம்ப கட்டத்தில் முன்னிலை வகித்தாலும் தற்போது கடும் போட்டி நிலவுவது ஆம் ஆத்மி, ஜேஜேபி போன்ற கட்சிகள் காங்கிரஸுக்கான வாக்குகளைப் பிரித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
‘சைனி நம்பிக்கை’ – முன்னதாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னர் மாநில முதல்வர் நாயாப் சிங் சைனி, ஹனுமன், பிரம்மசரோவர் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்றுவந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்துக்காக பாஜக நிறைய செய்துள்ளது. ஹரியானாவின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாஜக நேர்மையாக சேவை செய்துள்ளது. எங்கள் ஆட்சி ஹரியானாவின் வளர்ச்சிக்காக மீண்டும் உழைக்கும். இங்கே 3வது முறையாக நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி.” என்றார்.
46 வெற்றி இலக்கு: மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த 2 கட்சிகள் தவிர இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணியும், ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் களத்தில் உள்ளன. காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஆம் ஆத்மி கட்சி தனித்து களமிறங்கியது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். முடிவுகளை தேர்தல் ஆணைய இணையதளத்தில் (results.eci.gov.in. அல்லது eci.gov.in) அறியலாம்.
+ There are no comments
Add yours