புதுடெல்லி: ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சி 20 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
ஹரியாணா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி குறைந்தது 10 இடங்களில் போட்டியிட விரும்பியது. ஆனால் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு மூன்று தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என காங்கிரஸ் கட்சி கைவிரித்துவிட்டது. மேலும், ஆம் ஆத்மி கட்சி கலயாத் தொகுதி மற்றும் குருக்ஷேத்ரா பகுதியில் குறைந்தபட்சம் ஒரு இடத்தையாவது வலியுறுத்தியது. இதனால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து ஹரியானா ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா இன்று மாலைக்குள் காங்கிரஸ் முடிவெடுக்காவிட்டால் முழு வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் என்று கூறினார்.
இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சி முதல்கட்டமாக 20 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. அக்கட்சியின் ஹரியானா பிரிவு துணைத் தலைவர் அனுராக் தண்டா கலயாத் தொகுதியிலும், இந்து சர்மா பிவானியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். “முதல் பட்டியலை வெளியிட்டுள்ளோம், விரைவில் இரண்டாவது பட்டியலை வெளியிடுவோம். இப்போது தேர்தலுக்கு மிகக் குறைவான நேரமே உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் எங்கள் அமைப்பு வலுவாக இருப்பதால், நாங்கள் எங்கள் பொறுமையை வெளிப்படுத்தினோம். அதன் பிறகு, நாங்கள் எங்கள் பட்டியலை வெளியிட்டோம்” என்று கூறினார். காங்கிரஸ் ஏற்கெனவே 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
+ There are no comments
Add yours