சண்டிகர்:ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (அக்.5) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை செலுத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் ஆகியோர் தங்களுக்கே உரித்தான பாணியில் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில், “ஜனநாயகத்தின் முக்கியத் திருவிழாவில் வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்புவிடுக்கிறேன். வரலாற்று வாக்குப்பதிவை சாத்தியப்படுத்துங்கள். முதன்முறை வாக்காளர்களுக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “வாக்களிக்கும் முன்னர் மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கப் பிரச்சினை, ஊழல், சமூக ஏற்றத்தாழ்வுகளை நினைத்துப் பாருங்கள். கடந்த 10 ஆண்டுகள் நிலையை யோசித்து வாக்களியுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒலிம்பிக் தோல்விக்குப் பின்னர் ஓய்வை அறிவித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவர் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் களம் காண்கிறார். தேர்தலை ஒட்டி அவர், “மகளிர் உரிமைகள் நிலைநாட்டப்பட வாக்களியுங்கள்” என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
தேர்தலில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இது ஹரியானாவுக்கு மிகப்பெரிய திருவிழா. மக்களுக்கு இது மிக முக்கியமான நாள். வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க நான் வேண்டுகிறேன். 10 ஆண்டுக்கு முன்னர் பூபிந்திரா ஹூடா முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் விளையாட்டுத் துறையின் நிலை சிறப்பாக இருந்தது. நான் அமைச்சராவது என் கைகளில் இல்லை. அது கட்சி தலைமையின் முடிவுக்கு உட்பட்டது. மகளிர் உரிமைக்காக பாடுபடும் கட்சிக்கு வாக்களியுங்கள். நான் எந்தக் கட்சியைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். வெற்றி நம்பிக்கை இருக்கிறது. பாஜக விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் என்ன செய்தது என்பதை மக்கள் மறக்கவில்லை” என்றார்.
களத்தில் 1031 வேட்பாளர்கள்: ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள். ஹரியானா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.
+ There are no comments
Add yours