‘உலகளாவிய பொருளாதார சக்தியாகும் இந்தியா’… பிரதமர் மோடி !

Spread the love

உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா விரைவில் இடம்பெறும் என்றும் உலகளாவிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் பொங்க உறுதி அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘துடிப்பான குஜராத் 20-வது சர்வதேச உச்சி மாநாடு’ இன்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

‘துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாடு கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சி இன்ஜினாக குஜராத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது. அதன் பிறகுதான் ஆயிரக்கணக்கான வெற்றிக் கதைகள் உருவாகி உள்ளன. கடந்த நூற்றாண்டில் குஜராத் வர்த்தகர்கள் நிறைந்த மாநிலமாக விளங்கியது. இப்போது தொழில் உற்பத்தி முனையமாக உருவெடுத்துள்ளதால் குஜராத்துக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது.

அத்துடன் அதன் வர்த்தக புகழும் வலுவடைந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில், வாகன உற்பத்தித் துறை முதலீடு 9 மடங்கு அதிகரித்துள்ளது. நமது தொழிற்சாலை உற்பத்தி 12 மடங்கு அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தின் ரசாயன உற்பத்தி துறை உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. குஜராத்தில் தயாரிக்கப்படும் சாயங்கள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 75% பங்கு வகிக்கிறது.

இங்கு சுமார் 30 ஆயிரம் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மருந்து உற்பத்தித் துறையும் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் 50%, இருதய ஸ்டென்ட் உற்பத்தியில் 80% என குஜராத் பங்கு வகிக்கிறது. நாட்டில் விற்பனையாகும் வைர நகைகளில் 70% குஜராத்தில் தயாரானவை ஆகும். மேலும் நாட்டின் வைர நகைகள் ஏற்றுமதியில் இம்மாநிலத்தின் பங்கு 80% ஆக உள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.16,600 கோடி வைர நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

குஜராத் மாநாட்டில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் பிரதமர் மோடி உள்ளிட்டோர்
குஜராத் மாநாட்டில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் பிரதமர் மோடி உள்ளிட்டோர்
இந்த மாநாட்டைப் பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளைவிட வரும் 20 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. 2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அதற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும் சுயசார்பு இந்தியாவாக மாற்றவும் இந்த மாநாட்டை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இப்போது உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. உலகளாவிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும். உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா விரைவில் இடம் பிடிக்கும் என உறுதி அளிக்கிறேன்’

இவ்வாறு பிரதமர் மோடி பெருமிதமும், நம்பிக்கையும் தெறிக்கப் பேசினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours