உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘ நாகாஸ்திரா 1’ நவீன ட்ரோன்.. இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பு !

Spread the love

புதுடெல்லி: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘நாகாஸ்திரா-1’ ட்ரோன் முதல் தொகுப்பு இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் (இஇஇஎல்) நிறுவனம் இந்த ட்ரோனை உருவாக்கியுள்ளது.

வெடிமருந்துகளை சுமந்து சென்று எதிரிகளின் முகாம்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த வகை ட்ரோன்கள் சூசைட் ட்ரோன் அதாவது தற்கொலை ட்ரோன் என்று அழைக்கப்படுகிறது. இதனால் ராணுவ வீரர்களின் உயிருக்கு ஆபத்து நேர்வது தடுக்கப்படுகிறது.

அவசர கால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் இந்திய ராணுவம் 480 லோட்டர் வெடிமருந்து அடங்கிய ட்ரோன்களை வாங்குவதற்கு இஇஇஎல் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்தது. தற்போது, முதல் தொகுப்பாக ராணுவத்திடம் 120 ட்ரோன்களை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

நாகாஸ்திரா யுஏவி அமைப்பு வான்வெளியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. மற்ற ஆயுதங்களைப் போலல்லாமல் சோலாரின் நாகாஸ்திரா தேவைப்படின் தாக்குதலை நிறுத்திக் கொள்ளும் திறன்கொண்டது. திரும்பவும் அந்த ட்ரோனை மீட்டெடுக்க முடியும்.

ஜிபிஎஸ் முறையில் எந்தவொரு இலக்கையும் 2 மீட்டர் வரை துல்லியம் அறிந்து தாக்க முடியும். எந்த ரேடராலும் இந்த ட்ரோனை கண்டறிய முடியாது. மேலும், 4,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பறக்கக்கூடிய இந்த ட்ரோனை ரிமோட் மூலம் கட்டுபடுத்த முடியும். பகல்-இரவு கண்காணிப்பு கேமராக்கள், வெடிமருந்துகளை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது.

இலக்கு கண்டறியப்படாவிட்டால் ட்ரோன் செயல்பாட்டை நிறுத்தி பாராசூட்டை பயன்படுத்தி மென்மையாக தரையிறக்கம் செய்து அதனை மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மறுபயன்பாட்டு அம்சங்களில் முன்னேறிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ட்ரோன்களை விட நாகாஸ்திரா பல அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours