![](https://politricstv.com/wp-content/uploads/2023/10/AMIT-SHA-1024x512.jpg)
புதுடெல்லி: அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலங்களவை நடத்தை விதி 188-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக இதன் மூலம் நான் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கிறேன். மாநிலங்களவையில் நடத்தை விதிகள் விதி 188ன் கீழ் உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷாவுக்கு எதிராக சிறப்புரிமை குறித்த அறிவிப்பை நான் இதன்மூலம் அளிக்கிறேன். சபையின் முன்னிலையில் ஏதேனும் தவறான நடத்தை அல்லது தகவலை வெளியிடுவது மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவது ஆகியவை உரிமை மீறல் மற்றும் அவையின் அவமதிப்பு ஆகும் என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது.
கடந்த 17ம் தேதி மாநிலங்களவையில் அமித் ஷா பேசிய பேச்சு மற்றும் பேசிய விதம் சந்தேகத்துக்கு இடமின்றி மோசமானது. அரசியல் சாசன தலைமை சிற்பியாக விளங்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை அமித் ஷா அவமதித்துள்ளார். எனவே, அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா பேசியது என்ன?: மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
+ There are no comments
Add yours