வன்கொடுமைகளுக்கு உங்கள் அரசு பொறுப்பு கிடையாதா… மல்லிகார்ஜுன கார்கே !

Spread the love

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயாராக இருப்பதாகக் கூறி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம்: “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயாராக உள்ளேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் (நியாயப் பத்திரம்) பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பலன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதிலிருந்து ஒரு சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை வைத்து பிரிவினையை ஏற்படுத்துவது உங்கள் (பிரதமர்) வழக்கமாகிவிட்டது.

இவ்வாறு பேசுவது, நீங்கள் வகிக்கும் பதவியின் மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத அம்சங்களை உங்களின் ஆலோசகர்கள் உங்களுக்கு கூறியுள்ளனர். பிரதமர் இனி பொய்யான அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்பதற்காகவே, நான் நேரில் சந்தித்து விளக்கம் தர விரும்புகிறேன். உங்களை நேரில் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

காங்கிரஸ் ஏழைகளின் உரிமைகளைப் பற்றி பேசி வருகிறது. ஏழைகள் மீது உங்களுக்கும், உங்கள் அரசுக்கும் எந்தவித அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், ஜெயின், பவுத்தர் என யாராக இருந்தாலும் சரி. அது அனைவருக்கும் பொதுவானது.

உணவு, உப்புக்குக் கூட ஏழைகள் ஜிஎஸ்டி செலுத்துகிறார்கள். ஆனால், உங்கள் அரசோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. ஏழைகளின் சம்பாத்தியத்தையும், செல்வத்தையும் பறிப்பதற்காகவே நீங்கள் ஆட்சி செய்தீர்கள். ஆனால், ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவே காங்கிரஸ் எப்போதும் சேவை செய்து வருகிறது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளுக்கு உங்கள் அரசு பொறுப்பு கிடையாதா? உங்கள் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, ​​அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்தது என்ன?” என்று அந்தக் கடிதத்தில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, “நாட்டு மக்களிடம் உள்ள சொத்து, நகை, பணம் ஆகியவற்றைக் கணக்கெடுத்து, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களுக்கும், அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் போகிறது காங்கிரஸ் கட்சி’ என்று ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours