உலகில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள யஷோபூமியில் ஜி20 – பி20 நாடுகளின் சபாநாயகர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் இதில் பங்கேற்றனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்ற தலைவர்கள் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஜனநாயகத்தின் தாய் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜி20 – பி20 உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவாதம் மற்றும் விரிவான வாதங்கள் செய்வதற்கான முக்கிய இடமாக உலகம் முழுவதும் உள்ள பார்லிமென்ட்கள் விளங்குகின்றன. அனைத்து துறைகளிலும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்றார்.
உலகில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது அவசியம். அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காக ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டிய நேரம் இது. அனைவரின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக உழைக்க இதுவே நேரம். பயங்கரவாதம் புவிக்கே சவாலானது; மனித குலத்திற்கு எதிரானது.
மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது; பிளவுபட்ட உலகம் சவாலுக்கு தீர்வைக் கொடுக்காது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் உலகைப் பார்க்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா சந்தித்து வருகிறது. பூமிக்கும், மனித நேயத்திற்கும் பயங்கரவாதம் எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகம் உணர்ந்து கொண்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்து இணைந்து செயல்படுவது என்பது குறித்து உலகில் உள்ள பார்லிமென்ட் மற்றும் அதன் உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
+ There are no comments
Add yours