ஜூன் மாதத்தின் ஒரே நாளில் பெய்த மழைக்காக, 133 ஆண்டுகளில் காணாத சாதனையை பெங்களூரு நிகழ்த்தி உள்ளது.
ஜூன் 2 அன்று பெங்களூருவில் பெய்திருக்கும் 111 மிமீ மழை என்பது, 133 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது. ஜூன் மாதத்தில் ஒரே நாளில் அதிக மழை பெய்த அளவில், இந்த சாதனையை வானிலை மைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
133 ஆண்டுகளில் ஜூன் மாதத்தின் 2ம் தேதி, அதிகபட்சமான ஒற்றை நாள் மழையைக் கண்டதாக, பெங்களூரு இந்திய வானிலை மையத்தின் விஞ்ஞானி என்.புவியரசன் உறுதிப்படுத்தினார். மேலும் ஜூன் 1 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில் மட்டும் பெய்த மழை 140.7 மிமீ ஆகும். இது ஜூன் மாத சராசரியை விட அதிகமாக பெய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
அதிலும் ஜூன் 2 அன்று, 111 மிமீ மழை பதிவானதில், இது ஜூன் மாத சராசரியான 110.3 மிமீ என்றளவை ஒரே நாளில் கடந்து சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக ஜூன் மாதத்தின் அதிகபட்ச ஒற்றை நாள் மழை என்பது ஜூன் 16, 1891-ல் பதிவானதாகவும் அவர் கூறினார்.
பெங்களூரு வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் சி.எஸ்.பாட்டீல் கூறுகையில், ”கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை மேலும் அதிகரித்து வருகிறது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஜூன் 5 வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் தெற்கு கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா, பாகல்கோட், பெல்காவி, தார்வாட், கடக், ஹாவேரி, கொப்பல் மற்றும் விஜயபுரா வட உள் கர்நாடகா மற்றும் பல்லாரி, பெங்களூரு, சிக்கபல்லாபுரா, தாவாங்கரே, சித்ரதுர்கா, ஹாசன், மைசூர், துமகுரு உள்ளிட்டவற்றில் அடுத்த இரு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். விதான் சவுதாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி மழை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்” என்று தெரிவித்தார்.
மேலும் பருவ மழைக்கு முன்னதாக, சாலையின் பள்ளங்களை தூர்க்க ஏஐ உதவியுடனான ஆய்வுகளை பெங்களூரு உள்ளாட்சி அமைப்பு ஏற்கெனவே தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours