மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் இந்திய வாக்காளர்களின் முக்கிய பிரச்சினையாக வேலையின்மை என்பது நிலவுவதாக, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கு பரபரப்பாக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வெற்றி வாய்ப்பு குறித்தான கருத்துக்கணிப்புகள் பலவும், மோடி தலைமையில் பாஜக மூன்றாம் முறையாக ஆட்சியமைக்கும் என்றே தெரிவித்து வருகின்றன. அவற்றினூடே தற்போது வெளியாகி இருக்கும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்று, இந்திய வாக்காளர்களின் பெரும் பிரச்சினையாக வேலையின்மை நிலவுவதாக சுட்டிக்காட்டி உள்ளது.
இது ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கவும் கூடும். வேலையின்மை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவை பாஜக அரசின் பாதக அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. அவற்றிலிருந்து நாட்டு மக்கள் கவனத்தை திசை திருப்பவே, ராமர் கோயில், எல்லை பிரச்சினை, எதிர்க்கட்சிகள் மீது மத்திய விசாரணை அமைப்புகளின் பாய்ச்சல், பெரும்பான்மை வாதம் உள்ளிட்டவற்றை பாஜக பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் ’சிஎஸ்டிஎஸ் – லோக்நிதி’ என்ற அமைப்பு மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, பாஜகவுக்கு அதிர்ச்சியூட்டும் முடிவுகளை தெரிவித்துள்ளது. ’கடந்த காலத்தை விட தற்போது வேலை தேடுவது கடினமாகி உள்ளது’ என கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 27 சதவீதத்தினர் எதிர்வரும் தேர்தலில் வேலையின்மை என்பது முக்கிய பிரச்சினையாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றோர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், நாட்டின் பெரும்பிரச்சினைகளில் வேலையின்மைக்கு அடுத்தபடியாக அதிகரிக்கும் ஊழல் விளங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்திருப்பதாக 55 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுமார் 60 சதவீதத்தினர் விவசாயிகளின் போராட்டம் மற்றும் கோரிக்கைகளில் உண்மை இருப்பதாக தெரிவித்துள்ளனர். 63 சதவீதத்தினர் விவசாயிகளுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவு அளித்துள்ளனர். பதில் தந்தவர்களில் 16 சதவீதத்தினர், விவசாயிகளின் போராட்டத்தை அரசாங்கத்துக்கு எதிரான சதியாக சந்தேகிக்கினர்.
சமூக அறிவியல் மற்றும் மனித நேய ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்டிஎஸ், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், இந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பினை ஆன்லைன் வாயிலாக மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours