ஒட்டாவா: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தனது அரசு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே கசப்பான உறவு நீடித்து வரும் நிலையில் ட்ரூடோ இதனை தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். அதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது. இந்தியாவும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் உள்ள கனடா தூதரை வெளியேற சொல்லியது.
மேலும், கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையை அப்போது நிறுத்தி வைத்திருந்தது. கனடா நாட்டின் ஜனநாயகத்துக்கு இந்தியா அச்சுறுத்தலாக இருப்பதாவும் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆட்சிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். “தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகள். இரு நாடுகளையும் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்துக்காக தங்களது அரசுடன் இணைந்து பணியாற்ற கனடா தயாராக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 240 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல். அவருக்கு உள்நாடு முதல் உலக நாடுகள் வரை பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடியை வாழ்த்தினர். பதவியேற்பு விழாவில் இலங்கை மற்றும் வங்கதேச தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours