புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்குத் தேர்தலை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 5 வாக்குறுதிகளை அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “1. ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநருக்கும் ரூ. 10 லட்சம் வரை ஆயுள் காப்பீடும் ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடும் வழங்கப்படும். 2. ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்திற்காக ரூ. 1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.
- ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைப் படியாக ஆண்டுக்கு இருமுறை ரூ. 2,500 வழங்கப்படும். 4. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் அவர்களின் குழந்தைகளுக்கான பயிற்சிக்கான செலவை அரசே ஏற்கும். 5. சவாரிக்கு முன்பதிவு செய்து அழைக்க உதவும் ‘Ask App’ செயலி மீண்டும் தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாங்கள் முன்பும் அவர்களுடன் நின்றோம், எதிர்காலத்திலும் அவர்களுடன் நிற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க கடுமையாக உழைத்து வருகிறது.
+ There are no comments
Add yours