மூன்றாம் முறையாக பிரதமர் பதவியில் மோடி அமரவிருப்பதை முன்னிட்டு, அதற்கான பதவியேற்பு விழாவினை ஜூன் 8 மாலை நடத்த பாஜக தலைவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.
பாஜக தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைப்பது என்ற அதன் கனவு ஈடேறாது போனாலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி மீண்டும் அமைவது உறுதியாகி உள்ளது. கூட்டணிக் கட்சித்தலைவர்களுடனான சில சுற்று பேச்சுவார்த்தைகளில் இழுபறி தொடர்வதால், அவற்றை முடித்த பின்னர் பதவியேற்பு விழாவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி ஜூன் 8 அன்று மாலை பதவியேற்பு விழாவினை நடந்த பாஜக தலைமை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அன்றைய தினம் கேபினட் அமைச்சர்கள் பதவியேற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் பெரும் மாற்றங்களுக்கு திட்டமிட்டிருப்பதாலும், கூட்டணி கட்சிகள் சார்பில் முக்கிய பொறுப்புகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாலும், அவற்றை தீர்மானிக்கவும் பாஜகவுக்கு அவகாசம் தேவைப்படுகிறது.
தொடர்ந்து 3வது முறையாக வென்று ஆட்சியமைப்பதில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை நரேந்திர மோடி தற்போது நேர் செய்கிறார். அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் நேருவுடன் சகலத்திலும் முரண்பட்டிருப்பவர் மோடி. காஷ்மீர் முதல் பாகிஸ்தான் – சீனாவுடனான உறவு வரை, நேருவின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் அதிகம் சாடி வந்திருக்கிறார் மோடி. அந்த நேருவின் சாதனையை நேர் செய்யும் அடுத்த பிரதமர் என்ற வகையில் வரலாற்றில் அழியாத இடம் பிடித்திருக்கிறார் மோடி.
பாஜக மட்டுமே 370 இடங்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாக 400 இடங்கள் என்ற இலக்கை அறிவித்துவிட்டே தேர்தல் பிரச்சாரத்தில் குதித்த பாஜவுக்கு, மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மக்கள், பாஜகவுக்கு 240 இடங்களை மட்டுமே வாக்காளப் பெருமக்கள் வழங்கியுள்ளனர். ஆட்சியமைக்க 272 இடங்கள் அவசியம் என்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியாக வென்ற 292 இடங்களுடன் இம்முறை அரியணையேறுகிறார் மோடி. கூடுதல் பலத்துடன் திரண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கூட்டணித் தலைவர்களின் நெருக்கடிகளையும் சமாளித்தே இம்முறை மோடி ஆட்சி செய்தாக வேண்டியிருக்கும். அசுர பலத்தை இழந்த பின்னரான மோடி ஆட்சியின் புதிய மாற்றங்களை தரிசிக்கவும் வாக்களித்த மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
+ There are no comments
Add yours