நந்தூர்பார் (மகாராஷ்டிரா): அரசியலமைப்பு சட்டத்தை படிக்காததால் அது பிரதமர் நரேந்திர மோடிக்கு வெற்று புத்தகமாக தெரிகிறது என்று ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
நாட்டின் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அரசியல் சாசனத்தின் சிறிய அளவிலான புத்தகத்தைக் காட்டி, அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகத்தின் உள்ளே வெற்றுத் தாள்களே உள்ளதாகவும், போலியான புத்தகத்தைக் காட்டி அவர் பிரச்சாரம் செய்வதாகவும், இதன் மூலம் அவர் நாட்டின் அரசியல் சாசனத்தை அவமதித்துவிட்டதாகவும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோன்ற ஒரு புத்தகத்தை ஒருவர் வாங்கிப் பார்த்தபோது அதன் உள்ளே வெற்றுத்தாள்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்டோரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அவர் தனது உரையில், “பொதுக்கூட்டங்களில் நான் காட்டும் அரசியல் சாசன புத்தகத்தில் வெற்றுப் பக்கங்கள் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். நரேந்திர மோடிக்கு அரசியல் சாசனம் காலியாக உள்ளது. ஏனென்றால் அவர் அதைப் படிக்கவில்லை.
அதேபோல், நான் காட்டும் புத்தகத்தின் அட்டை சிவப்பு நிறமாக இருப்பதாகக் கூறி அதிலும் அரசியல் செய்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், அதன் நிறம் எங்களுக்கு முக்கியமில்லை. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். அதைப் பாதுகாக்க நாங்கள் எங்கள் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.
இந்த அரசியலமைப்பு வெற்று இல்லை. இது சுதந்திரப் போராட்ட தலைவர்களான பிர்சா முண்டா, புத்தர், காந்தி, பூலே ஆகியோரின் சிந்தனைகளைக் கொண்டுள்ளது. இந்த அரசியலமைப்பில் இந்தியாவின் ஆன்மா, இந்தியாவின் அறிவு உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை வெறுமையானது என்று கூறும் நரேந்திர மோடி, பிர்சா முண்டா, புத்தர், காந்தி, பூலே, அம்பேத்கர் ஆகியோரை அவமதிக்கிறார்.” என குற்றம் சாட்டினார்.
மேலும், பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் பழங்குடியினரை வனவாசி என கூறுவதை ராகுல் காந்தி விமர்சித்தார். இதுபற்றி பேசிய ராகுல் காந்தி, “அரசியலமைப்பில் உங்களுக்கு ‘பழங்குடியினர்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் உங்களை ‘வனவாசி’ என்று அழைக்கிறார்கள். பழங்குடியினருக்கும் வனவாசிகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது.
பழங்குடியினர் என்றால், இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்று அர்த்தம். வனவாசி என்பதன் பொருள், நீர், காடு, நிலம் ஆகியவற்றில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தம். உங்களின் இந்த உரிமையை காப்பாற்ற பிர்சா முண்டா ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். ஆனால், இன்று நரேந்திர மோடியும், பாஜகவினரும் இந்தச் சிந்தனையோடுதான் அலைகிறார்கள்.” என குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரா அரசு இங்குள்ள திட்டங்களை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதால், இங்குள்ள மக்கள் வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதாக ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தில் தெரிவித்தார். ”“வேதாந்தா-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் ஆலை 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கும், அதை பாஜக குஜராத்திற்கு அனுப்பியது. டாடா ஏர்பஸ் உற்பத்திப் பிரிவில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கும், இதுவும் பாஜகவால் குஜராத்திற்கு அனுப்பப்பட்டது.
ஐபோன் ஆலையில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கும், அதை பாஜக மகாராஷ்டிராவில் இருந்து பறித்து குஜராத்திற்கு அனுப்பியது. கெயில் பெட்ரோ கெமிக்கல் ஆலை மூலம் 21 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கும், அதுவும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இவை அனைத்தையும் சேர்த்தால், சுமார் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை மகாராஷ்டிர அரசு பெற்றிருக்கும். ஆனால், பாஜக அரசு அவற்றை பறித்துவிட்டது. இங்குள்ள இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
ஆனால் நமது அரசு இதை அனுமதிக்காது. குஜராத்தின் திட்டம் அவர்களுடையதாகவே இருக்கும், மகாராஷ்டிராவின் திட்டம் இங்கிருந்து வேறு எங்கும் செல்லாது” என தெரிவித்தார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) ஆகியவை அடங்கிய மகாவிகாஸ் அகாடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது குறித்து ராகுல் காந்தி உரையாற்றினார். “மகாலட்சுமி திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும். பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும்.
சமத்துவத்திற்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்த, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 50% இட ஒதுக்கீடு வரம்பு நீக்கப்படும். குடும்ப பாதுகாப்புக்காக ரூ.25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இலவச மருந்துகள் வழங்கப்படும்.
விவசாய செழிப்புக்கான உத்தரவாதமாக, விவசாயிகளின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வழக்கமான கடனை திருப்பிச் செலுத்தினால் ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். வேலையில்லாதவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்.” என ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
+ There are no comments
Add yours