தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது, என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில், கோவையில், சாய்பாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை நேற்று (மார்ச் 18) பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட வாகனப் பேரணி நடந்தது. கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் இந்த பேரணி நடைபெற்றது.
பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் குவிந்து மலர் தூவி வரவேற்றனர். பலர், மோடி.. மோடி.. என கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பளித்தனர். திரண்டிருந்த மக்களைப் பார்த்து உற்சாகமடைந்த பிரதமர் மோடி தன் இரு கைகளை தூக்கி மக்களிடம் காட்டி அசைத்தவாறும், வணக்கம் வைத்தவாறும் சென்றார்.
செல்லும் வழியில், நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஒரு மணிநேரம் நடைபெற்ற பேரணி, ஆர்.எஸ். புரத்தில் நிறைவடைந்தது.
அங்கு கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
வாகனப் பேரணியின் போது எடுத்த புகைப்படங்களை தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்த மோடி, ‘கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள்! இன்று மாலை நடந்த ரோட்ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை.
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை’, என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, இன்று சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில், பிரதமா் மோடி கலந்து கொண்டு தொண்டர்களிடம் உரையாற்றுகிறார்.
பிரதமா் மோடி சேலம் வருகையையொட்டி, பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரசாரக் கூட்டம் நடைபெறும் மைதானம் சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours