கசான்: ரஷ்யாவில் நடந்து வரும் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினை ஒட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரிக்ஸ் மாநாட்டின் இரண்டாவது நாளில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு தலைவர்களுக்கு இடையில் நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். மேலும் கிழக்கு லடாக் பகுதியில் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே மீண்டும் ரோந்து செல்வதற்கு இரண்டு நாடுகளுக்கு இடையில் உடன்பாடு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்பு இந்தச் சந்திப்பு நிகழ இருக்கிறது. இந்த சந்திப்பு இன்று மாலை 4.10 முதல் 5.10 வரை நடக்க இருக்கிறது.
முன்னதாக, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை இரவு விருந்து கொடுத்தார். இதில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ம் சந்தித்துக்கொண்டனர்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இரண்டு நாள் பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையில், சீன அதிபரும், இந்திய பிரதமரும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர்” என உறுதி செய்தார்.
முந்தைய சந்திப்புகள்: கடைசியாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான முறையான சந்திப்பு கடந்த 2019ம் ஆண்டு மகாபலிபுரத்தில் நடந்தது. 2023ம் ஆண்டு ஆகஸ்ட்-ல் ஜோகன்பெர்க்கில் நடந்த 15வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் சுருக்கமான முறைசாரா உரையாடல் நடத்தினர். அதேபோல் 2022-ம் ஆண்டு நவம்பரில் ஜி20 தலைவர்களுக்கு இந்தோனேஷியா அதிபர் கொடுத்த இரவு விருந்தில் மோடியும் ஜி ஜின்பிங்கும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு சுருக்கமாக உரையாடினர்.
ரஷ்யா, ஈரான் அதிபர்களைச் சந்தித்த பிரதமர் மோடி: ரஷ்யாவின் கசான் நகருக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஈரானிய அதிபர் மசோவுத் பெஜேஷ்ஹியன் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதினுடனான சந்திப்பு கூறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது. இது தொடர்பாக ரஷ்யா, உக்ரைனுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். ரஷ்யாவின் கசான், எக்கத்தரீன்புர்க் நகரங்களில் இந்திய தூதரகங்கள் திறக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.
கடந்த ஜூலையில் பெஜேஷ்கியன் ஈரானின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு பிரதமர் மோடி அவரை முதல் முறையாக சந்திக்கிறார். சபாஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு – தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற முக்கிய விஷங்களில் இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தின.
இந்தச் சந்திப்புக்கு பின்பு இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியானுடன் மிகவும் சிறப்பான சந்திப்பு நடந்தது. நாங்கள் இருவரும் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து முழு அளவில் விவாதித்தோம். எதிர்கால துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours