பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி நேஹா ஹிரேமத்வின் தந்தையிடம் தொலைப்பேசியில் பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுடன் நாங்கள் துணை நிற்போம்” ஆறுதல் தெரிவித்தார்.
நேஹா ஹிரேமத் கர்நாடகாவின் கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃபயாஸ் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாணவியின் தந்தையும், ஹுப்ளியின் தார்வாட் மாநகராட்சியின் கவுன்சிலரும், காங்கிரஸ் நிர்வாகியுமான நிரஞ்சன் ஹிரேமத்திடம் தொலைப்பேசியில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, நேஹா கொலை வழக்கை சிஐடியிடம் ஒப்படைக்கும் மாநில அரசின் முடிவையும், விரைவான வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கையையும் விவரித்தார்.
கர்நாடக சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் செவ்வாய்க்கிழமை நிரஞ்சன் ஹிரேமத் வீட்டுக்குச் சென்றார். அப்போது, நிரஞ்சனிடம் தொலைப்பேசி வழியாக முதல்வர் சித்தராமையா பேசினார். அவர் கூறுகையில், “நிரஞ்சன் நான் மிகவும் வருந்துகிறேன். நாங்கள் உங்களுடன் துணை நிற்போம். இது மிகவும் தீவிரமான விஷயம். குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கு பதில் அளித்த மாணவியின் தந்தை நிரஞ்சன், “எனது மகள் கொலை வழக்கை சிஐடி வசம் ஒப்படைக்கும், விரைவு நீதிமன்றம் அமைக்கும் அரசின் முடிவுக்கு எனது குடும்பத்தினர், நலம் விரும்பிகள், சமூகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரைவாக அதற்கான உத்தரவை பிறப்பித்து நீதியை நிலைநாட்டுங்கள்” என்றார். அதற்கு பதில் அளித்த முதல்வர் சித்தராமையா, “கூடிய விரைவில் நாங்கள் அதை உறுதி செய்வோம்” என்றார்.
முன்னதாக, நேஹா ஹிரேமத்தின் கொலை வழக்கு விசாரணையை குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கவும், வழக்கை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க மாநில அரசு முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் திங்கள்கிழமைத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மாணவியின் கொடூரக் கொலை சம்பவம், கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியான பாஜவுக்கும் இடையில் அரசியல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தக் கொலை தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்ததாக ஆளுங்கட்சிக் கூறிவரும் நிலையில், பாஜக இதனை லவ் ஜிகாத் எனவும், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதற்கு இந்த ஒரு நிகழ்வே சாட்சி என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, முதல்வர் சித்தராமையா கூறும்போது, ”கொலைக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதனை மத ரீதியான அரசியலுக்கு பாஜக பயன்படுத்துகிறது” என்று கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours