முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு தினம் இன்று (மே.27) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தி இசை இசைக்கப்பட்டது. சாந்தி வனத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர், நேருவின் நினைவிடத்தில் மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நினைவுக் குறிப்பில், “நவீன இந்தியாவின் சிற்பி பண்டித ஜவஹர்லால் நேரு. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை உள்பட பல்வேறு துறைகளில் நாட்டை முன்னெடுத்துச் சென்றவர் அவர். ஜனநாயகத்தின் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகவும் விளங்கிய அவரது ஒப்பற்ற பங்களிப்பை குறிப்பிடாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. அவரது நினைவு நாளில் அவருக்கு எங்கள் பணிவான அஞ்சலியை செலுத்துகிறோம்.
‘நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம், நாட்டின் ஒற்றுமை ஆகியவையே நம் அனைவரின் தேசிய மதம். நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம், வெவ்வேறு மாநிலங்களில் வாழலாம், வெவ்வேறு மொழிகளைப் பேசலாம், ஆனால் அது நமக்குள் எந்தச் சுவரையும் உருவாக்கக்கூடாது. முன்னேற்றத்தில் எல்லா மக்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
நம் நாட்டில் சிலர் பெரும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை’ என்று கூறியவர் ஜவஹர்லால் நேரு. இன்றும் காங்கிரஸ் கட்சி அதே “நீதி”யைத்தான் பின்பற்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி விடுத்துள்ள செய்தியில், “நவீன இந்தியாவைக் கட்டமைத்தவரும், நாட்டின் முதல் பிரதமருமான பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலி. ஒரு தொலைநோக்கு பார்வையாளராக, அவர் தனது முழு வாழ்க்கையையும் சுதந்திர இயக்கத்தின் மூலம் இந்தியாவைக் கட்டியெழுப்பவும், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பின் அடித்தளத்தை நிறுவவும் அர்ப்பணித்தார். அவருடைய விழுமியங்கள் எப்போதும் நம்மை வழிநடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் சாந்தி வனத்துக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். தனது திறமையான தலைமைத்துவம் மற்றும் வலுவான முடிவுகளால் நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு வணக்கம். ஜவஹர்லால் நேருவின் ஜனநாயக மற்றும் முற்போக்கான விழுமியங்கள் நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளன. இந்த விழுமியங்களுடன் முன்னேறி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம். அவருடைய விழுமியங்கள் எப்போதும் நம்மை வழிநடத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours