நிபா வைரஸ் காய்ச்சலால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளதாக கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018-ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து நிபா வைரஸைக கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனால் நிபா பாதிப்பு முற்றிலுமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக சமீபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சிலரும் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறிகள் இருந்துள்ளன.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி உயிரிழந்தவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைக் கடந்த 12-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்தார்.
கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்மக் காய்ச்சல் தீவி்ரமாக பரவி வரும் நிலையில் நிபா வைரஸ் குறித்த இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிபா வைரஸால் காய்ச்சல் ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 789 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கோழிக்கோடு மருத்துவமனையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 9 பேர் கண்காணிப்பில் உள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் நிபா வைரஸ் கட்டுக்குள் உள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours