புதுடெல்லி: 2024-25 மத்திய பட்ஜெட் அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கொடுத்து ஒப்புதலைப் பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கியது. மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்திருப்பதால் நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டின் முன்னோட்டமாக கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி பட்ஜெட் நகலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கொடுத்து ஒப்புதலை பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தயிரும் சீனியும் கலந்த இனிப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
முன்னதாக, காலையில் நிதியமைச்சகத்துக்கு வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், வழக்கம்போல் அங்கே நிதியமைச்சக அதிகாரிகளுடன் பட்ஜெட் உரை அடங்கிய டேப்ளட்டுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் குடியரசுத் தலைவரை சந்தித்த பின் நாடாளுமன்றம் சென்றார். பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்துக்கு வந்துசேர்ந்தார். இன்னும் சற்று நேரத்தில் 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மோடி அரசின் கீழ் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours