புதுடெல்லி: மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அதனை நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், “இந்த நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணை மிகுந்த குறைபாடுகளைக் கொண்டுள்ளது. மேலும் அவைத்தலைவரின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் மிகவும் அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நம்பிக்கையில்லா தீர்மானம் 14 நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்ற தேவையை இத்தீர்மானம் பூர்த்தி செய்யவில்லை. மேலும் தீர்மான நோட்டீஸில் தன்கரின் பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
என்றாலும், கடந்த டிச.10ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 60 எம்பிக்களின் கையெழுத்து பெறப்பட வேண்டும் என்ற விதி சரியாக கடைபிடிக்கப்பட்டிருந்தது.
மாநிலங்களவை பொதுச்செயலர் பி.சி. மோடி அவையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த பதவி நீக்க அறிவிப்பு அரசியலமைப்பு நிறுவனங்களை குறைமதிப்பிடுவது மற்றும் குடியரசு துணைத் தலைவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 67(பி)- ன் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சமாஜ்வாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த தீர்மானத்தினால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
சுதந்திர இந்திய வரலாற்றில் மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்படுவது இதுவே முதல் முறை. அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவையை பாரபட்சத்துடன் நடத்துவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கே குற்றம் சாட்டியிருந்தனர். எதிர்க்கட்சிகளின் இந்தக் கவலை இந்த குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே தொடங்கியது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே அவையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இதனிடையே, அவைத்தலைவருக்கு ஆதரவாகப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, ஜக்தீப் தன்கரை விவசாயி மகன் என்று அழைத்து தனது ஆதரவினைத் தெரிவித்திருந்தார். மேலும், அவைத்தலைவரை மதிக்கத்தெரியவில்லை என்றால் நீங்கள் உறுப்பினர்களாக நீடிக்க தகுதி இல்லாதவர்கள் என்று எதிர்கட்சிகளைச் சாடினார்.
+ There are no comments
Add yours