காங்கிரஸிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… மோடி !

Spread the love

காங்கிரஸின் கர்நாடக ஆட்சியில் நடக்கும் குற்றச் சம்பவங்களை பட்டியலிட்டு, அக்கட்சியிடம் மாநில மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கார்ப்பரேட்டரின் மகள் கொலை, பெங்களூரு ஹோட்டலில் குண்டுவெடிப்பு, ஹனுமான் சாலிசாவுக்காக தாக்குதல் என 3 சம்பவங்களை பட்டியலிட்டு, பிரதமர் மோடி கர்நாடக மக்களை எச்சரித்துள்ளார். கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் சமீப நாட்களில் நடந்த தொடர் குற்ற சம்பவங்களை குறிப்பிட்டு, அக்கட்சியிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

“காங்கிரஸ் அரசாங்கம் ஊக்குவிக்கும் சிந்தனைகள் மற்றும் சித்தாந்தங்கள் மிகவும் ஆபத்தானது. எங்கள் மகள்கள் தாக்கப்படுகிறார்கள், உணவு விடுதியில் குண்டு வெடிக்கிறது, மதப் பாடல்களைக் கேட்பதற்காக மக்கள் தாக்கப்படுகிறார்கள். எனவே ஆளும் காங்கிரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எனது சகோதர சகோதரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்தக் கூட்டத்தில் மோடி கேட்டுக்கொண்டார்.

முதல்கட்ட வாக்குப்பதிவுடன் நேற்று தொடங்கிய மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடு தழுவிய ஏழு கட்டத் தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக இந்த வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் தலா 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

முந்தைய 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 25 தொகுதிகளை வென்றது. தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளரான சுமலதா அம்பரீஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். அந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த மதசார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்), தற்போது பாஜகவுடன் இணைந்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அங்கே பாஜக ஆட்சி அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பாஜக – மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் இடையிலான மோதல் இந்த தேர்தலில் சூடு பிடித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours