பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, நிதி சூழலுக்கு ஏற்ப, புதுடில்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த 1977 – 78ல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இது, 2013 – 14 காலகட்டத்தில் 8.75 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது.
கடந்த 2021 – 22ம் ஆண்டுக்கான வட்டி விகிதம், 2022 மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. அப்போது 8.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டம், புதுடில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் 2023- 24ம் நிதியாண்டில், 8.15 சதவீதமாக உள்ள வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் வாயிலாக ஆறு கோடி தொழிலாளர்கள் பயனடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதித்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன், அரசாணையில் வெளியிடப்பட்டு, பயனாளர்களின் கணக்குகளில் வட்டி தொகை வரவு வைக்கப்படும்.
+ There are no comments
Add yours