கோவை: அடுத்த விண்வெளி புரட்சியில் டவர்கள் இல்லாமல் செல்போன்கள் இயங்கும் வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கோவை வந்த இஸ்ரோ முன்னாள் இயக்குநர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜப்பானில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அந்நாட்டில் பணியாற்ற இந்திய இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
அவற்றை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து விண்வெளி புரட்சி வருகிறது. செல்போன் டவர் இல்லாத வகையில், செயற்கை கோள்களால் இயங்கும் அடுத்த தலைமுறை கைபேசி வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. குலசேகரபட்டினத்தில் அமையும் ஏவு தளம் உலகின் மிகச் சிறந்த மையமாக அமையும்.
வர்த்தக ரீதியில் தினம் தினம் ராக்கெட் அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும். நிலவை நோக்கிய பயணங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்த உள்ளன. அடுத்த கட்ட ஆராய்ச்சி நிலவை மையமாக வைத்து இருக்க வேண்டும். நிலவில் இருந்து சில டன் கனிமங்கள் எடுத்து வந்தாலே பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுக்க வாய்ப்பு உள்ளது.
விண்வெளி சார்ந்த பாடப்பிரிவுகள் அதிகம் வர வேண்டும். சந்திரயான் வெற்றியை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. விண்வெளி சார்ந்த இந்தியாவின் முயற்சிகள் சிக்கனமாகவும் சிறப்பாகவும் உள்ளன. விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான பயணத்தை மாற்ற முடியும்.
நிலவுக்கு செல்லும் திட்டத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நிலவில் சந்திரயான் 3 இறங்கிய இடத்திலேயே விண்வெளி மையம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளோம். அது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
+ There are no comments
Add yours