பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை !

Spread the love

நாடாளுமன்ற தேர்தல் தேதி வெகுவிரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்.

தேர்தல் நெருங்கும் சூழலில் பிகார், உத்தரபிரதேசம் என நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பொதுக்கூட்ட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் பிரதமரை பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

அதன்பின்னர், சாலை மார்க்கமாக 3 கிலோ மீட்டர் தொலைவில் அகஸ்தீஸ்வரம் ஏழுசாத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக-வில் கட்சியை இணைத்த சரத்குமார், விஜயதரணி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். நண்பகல் 12.15 மணியளவில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார்.

பிரதமர் வருகை…பலத்த பாதுகாப்பு…

பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நான்காயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருப்பு கொடி போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்தின் பூர்வீக வீடு உள்ள பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பாஜக பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கணிசமான வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே திருப்பூர், நெல்லை ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இந்த சூழலில், கடந்த இரண்டரை மாதங்களில் 5 ஆவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours