குவைத்: பிரதமர் நரேந்திர மோடிக்கு, குவைத் நாட்டின் உயரிய ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இவ்விருதினை அந்நாட்டின் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ், பிரதமருக்கு வழங்கி கவுரவித்தார்.
இந்த விருதினை பிரதமர் மோடி, இந்தியா – குவைத் இடையிலான நீண்ட கால நட்புக்கும், 140 கோடி இந்திய மக்களுக்கும் அர்ப்பணித்தார். கடந்த 1947-ம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகத் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி, குவைத் மன்னருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாக, இந்தியா – குவைத் உறவுகள் ஒரு ராஜாங்க ரீதியிலான கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்டது.
குவைத்தின் பயான் அரண்மணையில் அந்நாட்டு மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார். இரு தரப்பு உறவுகளை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வது குறித்த வழிமுறைகளை ஆராய்வது குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. அப்போது குவைத்தில் வாழும் இந்தியர்களின் நலன்களுக்காக பிரதமர் மோடி குவைத் மன்னருக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, குவைத் அரண்மனையில் பிரதமர் மோடிக்கு மரியாதை நிமித்தமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அந்நாட்டு மன்னரும் கலந்து கொண்டார். இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள பதிவில், “வரலாற்றுச் சிறப்பு மிக்க வருகைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பானியன் அரண்மனையில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ் பிரதமரை அன்புடன் வரவேற்றார்” என்று தெரிவித்திருந்தார்.
குவைத் நாட்டின் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ் அவர்களின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வளைகுடா நாடான குவைத் சென்றிருக்கிறார். 43 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய பிரதமர் ஒருவர் குவைத்துக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
அங்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் முதல் துணை பிரதமரும், பாதுகாப்பு மற்றும் உள்விகாரத்துறை அமைச்சருமான சேக் ஃபகத் யூசெஃப் சவுத் அல்-சபா, வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா மற்றும் பல உயரதிகாரிகள் வரவேற்றனர்.
சேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு மைதானத்தில் நடந்த ‘ஹலா மோடி’ என்ற சமூக விழாவில் குவைத்தில் வசிக்கும் புலம்பெயர் இந்தியர்கள் தங்களின் உற்சாகத்தினையும் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தினர்.
அதேபோல், குவைத்தில் உள்ள ஸ்பிக் தொழிலாளர் முகாமுக்குச் சென்று இந்திய தொழிலாளர்களுடன் கலைந்துரையாடினார். அப்போது, நாட்டுக்கு அவர்கள் அளித்து வரும் பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.
+ There are no comments
Add yours