விஸ்வகர்மா திட்டத்தை இன்று தொடங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி !

Spread the love

ரூ 13 ஆயிரம் கோடியில் பிரதமர் மோடி அறிவித்த விஸ்வகர்மா திட்டம் இன்று தொடங்குகிறது.

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். அடுத்த நாளே ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது.

அதில் இந்த திட்டத்திற்கு ரூ 13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாடு முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புவோர் பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.

இதன்படி பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ 15 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். முதல் தவணையாக ரூ 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

இரண்டாவது தவணையாக ரூ 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கூடிய கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும். கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளை உள்நாடு, வெளிநாடு விற்பனை சங்கிலியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலணி தைப்பவர், தச்சர், கொல்லர், பொற்கொல்லர், கொத்தனார், கூடை பின்னுவோர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், பூட்டு தயாரிப்பவர் உள்ளிட்டோர் விஸ்வகர்மா திட்டத்தில் இணையலாம்.

இந்த திட்டத்தில் கடன் கேட்டு அது அங்கீகரிக்கப்பட்டால் உடனடியாக கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நீங்கள் 3 முதல் 5 ஆண்டு காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours