2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற ஏதேனும் ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில்தான் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (ஜூன் 17) மாலை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாட்டில் ராகுல் காந்தி ராஜினாமா செய்கிறார். அவருக்குப் பதிலாக அங்கு பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அரசியல் பிரவேசம்: பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியல் பிரவேசம் இது. அதனாலேயே வயநாடு மீண்டும் ஒரு நட்சத்திர தொகுதியாக கவனம் பெறுகிறது.
பிரியங்கா காந்தி தேர்தல் களம் காணலாம் என்ற பேச்சுக்கள் 2019 மக்களவைத் தேர்தல் தொட்டே உலாவந்த நிலையில் இப்போதுதான் அது சாத்தியப்பட்டுள்ளது. 52 வயதில் தேர்தல் களம் காணும் பிரியங்கா காந்தி ஒருவேளை தொகுதியைக் கைப்பற்றினால் நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என மூவரின் இருப்பும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “வயநாடு மக்கள் 2019 மக்களவைத் தேர்தலின்போது எனது கடினமான நேரத்தில் எனக்கு சக்தியளித்தனர் என்று நினைவுகூர்ந்தார். வயநாட்டுடன் தனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கிறது” என்றும் கூறினார்.
கடந்த 2019 தேர்தலில் உ.பி.யின் அமேதியில் ராகுல் காந்தி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் ராகுல் மோசமாக தோற்றார். ஆனால் கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வீத்தினார் ராகுல். இந்த முறை வயநாட்டில் ராகுல் வெற்றி வாய்ப்பு விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். கடந்த முறையைவிட இந்த வித்தியாசம் குறைவுதான் என்றாலும் காங்கிரஸைத் தழுவிக் கொள்ள வயநாடு தயாராகத் தான் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
வயநாடு இந்த வகையில் காங்கிரஸின் கோட்டையாகவே கருதப்படுவதால், பிரியங்கா இங்கே எளிதாக வென்றுவிடுவார் என்றே சொல்லப்படுகிறது.
குடும்பத் தொகுதி என்பதால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பி.யாக தொடர முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வயநாட்டில் பிரியங்காவை களம் இறக்குவது மூலம் வடக்கு – தெற்கு என இரண்டு பகுதியிலும் காந்தி குடும்பம் தனது இருப்பை வலுப்படுத்த முயற்சி செய்கிறது எனக் கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
தெற்கில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள கேரளாவை முக்கியமான மையமாக காங்கிரஸ் கருதுவதும் பிரியங்காவை அங்கே களமிறக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ராகுல் காந்தி வயநாட்டை விடுத்து ரேபரேலியை தக்கவைத்துக் கொண்டிருப்பது காங்கிரஸ் கேரளாவை கைவிடுகிறது என்று பார்ப்பதை விடுத்து வயநாட்டை ஸ்வீகரித்துக் கொள்ள பிரியங்காவை களமிறக்குகிறது என்றே பார்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
வயநாடு காந்தி குடும்பத்துக்கு மிகவும் முக்கியமானது. காந்தி குடும்பத்துக்கு தமிழகத்தில் நேரடி பிரதிநிதி இல்லை. கர்நாடகாவிலாவது நம்பகத்தன்மை மிகுந்த டிகே சிவகுமார் இருக்கிறார். அதனால் வயநாட்டில் பிரியங்கா காந்தியை களம் இறக்குவது இப்போது அரசியல் ரீதியாக சிறந்த உத்தி. காரணம் கேரளாவில் பாஜக தடம் பதித்துள்ளது. சுரேஷ் கோபி எம்.பி.யாகி உள்ளார். இந்தச் சூழலில் காந்தி குடும்பத்தின் நேரடி சுவடு கேரளாவில் இருப்பது கேரளாவுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தெற்குக்கும் அவசியமாகிறது. அதுமட்டுமல்லாது காந்தி குடும்பம் தெற்கை புறக்கணிக்கிறது என்ற புகார்களுக்கு பிரியங்கா காந்தியை களம் இறக்குவது முற்றுப்புள்ளி வைக்கும்.
பிரியங்காவின் வீச்சு: முதன்முதலாக கடந்த ஜனவரி 2019 அன்று உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதுவே பிரியங்கா காந்தி வத்ராவின் தீவிர அரசியல் பிரவேசமாக அமைந்தது. அவருக்கு இருந்த வரவேற்பின் காரணமா செப்டம்பர் 2020-ல் உபி.யின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
உளவியலில் இளங்கலையும், பவுத்த ஆய்வுகளில் முதுகலையும் படித்த பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரங்களில் வீறு கொண்டு முழங்கினார். அவருடைய வீச்சு உ.பி.யில் உணரப்பட்டாலும் கூட அது வாக்குகளாக மாறவில்லை. உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு பெரிய ஆதரவு கிட்டவில்லை. ஆனாலும் மனம் தளராத பிரியங்கா காந்தி 2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே சுழன்றடித்து பிரச்சாரம் மேற்கொண்டார். நல்ல பேச்சாளர், கூட்டத்தை ஈர்க்கவல்லவர் போன்ற அடையாளங்களை இந்த குறுகிய காலத்தில் பிரியங்கா சம்பாதித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் தோல்விகளுக்குப் பின் காங்கிரஸுக்கு தன்னை தக்கவைத்துக் கொள்வதே சிக்கல் என்ற சூழல் உருவானது. இந்நிலையில் வயநாட்டில் பிரியங்காவை காங்கிரஸ் களம் இறக்குவது பாஜகவுக்கு ஒரு நேரடி சவால் போல் இருக்கும். காங்கிரஸ் இதுவரை தற்காப்பு அரசியலை செய்துவந்த நிலையில் இனி எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுக்க இது உறுதுணையாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். வயநாடும் காங்கிரஸின் தெற்கு வியூகமும் எப்படி பலன் கொடுக்கிறது என்பது இனி அடுத்தடுத்து வரும் தேர்தல் நகர்வுகளில் தெரியவரும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
ஆனி ராஜா வரவேற்பு: பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், இதனை வயநாட்டில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர், “பிரியங்கா காந்தியை களமிறக்குவதை நான் வரவேற்கிறேன். மக்களவையில் பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ள நிலையில் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இத்தொகுதியில் மீண்டும் நான் வேட்பாளராக அறிவிக்கப்படுவேனா என்பதெல்லாம் விவாதிப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சி மேலிடம் இது தொடர்பான முடிவுகளை எட்டும்.” என்றார்.
பிரியங்கா வயநாட்டில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதர்சன் கூறுகையில், “ராகுல் காந்தி இந்தியாவை வழிநடத்த வேண்டியுள்ளது. அவரை வயநாட்டில் மட்டும் கட்டுப்படுத்தி வைக்க இயலாது. நாம் அனைவரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், “ராகுல் வயநாட்டு தொகுதியை நேசிக்கிறார். அதன் விளைவாகவே அவருடைய சகோதரர் பிரியங்கா அங்கு போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். பிரியங்கா நம் நாட்டின் மிக முக்கிய தலைவராக உருவாகி வருகிறார். அவர் வயநாட்டில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி கொள்வார். வயநாடு மக்கள் பிரியங்காவை வரவேற்பார்கள். ராகுல் காந்தி இந்தி இதயத்தில் இருப்பது நரேந்திர மோடியின் தாக்கத்தை கட்டுப்படுத்த அவசியம்” என்றார்.
கேரளாவில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான ஐயுஎம்எல் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) கட்சியின் தலைவர் பிகே குன்ஹாலிகுட்டி கூறுகையில், “நம் நாட்டின் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதே தலையாய பொறுப்பு. அதை உறுதி செய்ய எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் தயார். பிரியங்கா காந்தியை வயநாடு வேட்பாளராக அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.
இவ்வாறாக தேர்தல் களமும், அரசியல் சூழலும் பிரியங்கா காந்திக்கு சாதகமாக இருக்க அவர் வயநாட்டில் வெற்றி பெற்றால் காங்கிரஸின் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயநாட்டில் போட்டியிடுவது பதற்றத்தை தருகிறதா என்ற கேள்விக்கு பிரியங்கா காந்தி, “நிச்சயமாக எந்த படபடப்பும் இல்லை.வயநாடு மக்கள் ராகுல் காந்தி இல்லையே என்று சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வேன்” என்று உற்சாக பதிலை அளித்துள்ளார்.
+ There are no comments
Add yours