இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்துக்கு ஒரு முடிவு கட்டுங்கள்.. கொதிக்கும் ராமதாஸ்..!

Spread the love

தமிழக மீனவர்களைத்தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பதற்காக இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்துக்கு ஒரு முடிவு கட்டுங்கள் என மத்திய அரசை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது..

“வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரை அருகில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்கள் மீது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்தாக்குதலில் சத்யராஜ், வேல்முருகன், கோடிலிங்கம், மணியன் ஆகிய நான்கு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் கருவிகளையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடல் கொள்ளையர்களின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

கடந்த இரு மாதங்களில் மட்டும் 10 முறை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒருபுறம் சிங்களக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகள், இன்னொருபுறம் கடல் கொள்ளையர்களின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடல் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களைத்தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பதற்காக இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கூலிப்படையினர் ஆவர். தொடர் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் தமிழக மீனவர்களை வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செய்யாமல் தடுப்பது தான் இலங்கை அரசின் நோக்கம் ஆகும். இந்த சதித் திட்டத்தை இந்திய அரசு முறியடிக்க வேண்டும்.

உலகின் கொடிய கடற்கொள்ளையர்களை எல்லாம் ஒழித்த பெருமை இந்திய கடற்படைக்கு உண்டு. ஆனால், இந்தியாவின் அடிமடியில் இருந்து கொண்டு இந்திய குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல.

கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டி, வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது ஆகியவற்றுடன் கடமை முடிந்து விட்டதாக தமிழக அரசு நினைக்காமல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இலங்கை கடற்கொள்ளையர்களை இண்டர்போல் எனப்படும் பன்னாட்டு காவல்துறை உதவியுடன் கைது செய்து தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours