புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவை கூடியதும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, இரு அவைகளிலும் விவாதங்கள் தொடங்கின. மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி சமலா கிரன் குமார், “குழந்தைகள் நலக் குறியீட்டில் முதல் 50 நாடுகளில் இந்தியாவைக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, “அனைத்து இந்தியக் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை வழங்குவதற்காக அரசாங்கம் வாத்சல்ய திட்டத்தை தொடங்கியுள்ளது” என்றார்.
புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழைகள் மற்றும் நடுத்தர பிரிவினர் இலவசமாக சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுக்குமா என மற்றொரு காங்கிரஸ் எம்.பி அமரிந்தர் சிங் ராஜா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, “புற்றுநோய் ஒரு பயங்கரமான நோய். ஆயுஷ்மான் பாரத் எனும் மத்திய அரசின் இலவச காப்பீட்டுத் திட்டத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற முடியும். ஒரு நோயாளி ரூ.5 லட்சம் வரை இதில் பயன்பெற முடியும்” என்று குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தை பாஜக பிரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், கர்நாடக அரசின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து பாஜக எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.நிரஞ்சன் ரெட்டி, “மத்திய அரசு பட்ஜெட்டில் தொழிற்பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இதனை ரூ.15,000 – ரூ. 20,000 ஆக உயர்த்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். மேலும், “முதல் 5 ஆண்டுகளுக்கு 20-30 லட்சம் பேர் வரை பயிற்சியில் சேர்க்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பயிற்சியாளர்களுக்கு மாதத்துக்கு ரூ.5,000 இன்டர்ன்ஷிப் தொகை வழங்கப்படும் என்பதுதான் அரசின் நிலை” என விளக்கம் அளித்தார்.
சமாஜ்வாதி கட்சி எம்பி ஜாவெத் அலி கான் கொண்டுவந்த தனி மசோதா மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்பி நீரஜ் டேங்கி தெரிவித்த கருத்தால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது. அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்ற நிலையில் பல்வேறு உறுப்பினர்கள் பட்ஜெட் மீது தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.
+ There are no comments
Add yours